Pages

Subscribe:

Thursday, July 3, 2008

கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமைத் தழுவிய மாபெரும் மன்னர்

அன்று அபிஸீனிய மன்னராக இருந்தவர் நஜ்ஜாஷி. இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை நபி (ஸல்) அவர்கள் எழுதி அனுப்பினார்கள். நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.
அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன் அவன் மிகத் தூய்மையானவன் ஈடேற்றம் வழங்குபவன் பாதுகாவலன் கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார். எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.
தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உம்மை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீர் எனக்கு இசைந்து என்னை நீர் பின்பற்ற வேண்டும் என்று நான் உம்மை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உமக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளும். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.''
(ஜாதுல் மஆது, ‘‘ரஸ_லே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்'')
நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.''
ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா வுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (ஆதாரம் : அர்ரஹீக்குல் மஃதூம் - தாருல் ஹ§தா வெளியீடு)

0 comments: