Pages

Subscribe:

Saturday, December 5, 2009

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)

" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//
குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர்.திருக்குர்ஆனில் சரித்திரத் தவறா? என்ற தொடரின் இரண்டாம் பகுதியில் இது பற்றிப் பார்ப்போம்.

இறைதூதர் மூஸா (அலை) அவர்கள் தவ்றாத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சினாய் மலைக்குச் சென்றிருந்த போது சாமிரி என்ற பொற்கொல்லன் இஸ்ராயீல் சந்ததிகளின் ஆபரணங்களைப் பெற்று நெருப்பில் உருக்கி அதிலிருந்து காளைக் கன்றின் உருவச்சிலையை உருவாக்கி அதனை வணங்குமாறு மக்களிடம் கூறிய சம்பவத்தை திருக்குர்ஆன் 20 அத்தியாயம் 85 முதல் 97 வரையிலான வசனங்களில் விளக்குகிறது.

குறிப்பிட்ட அச்சம்பவத்தில் தொடர்புடைய நபரைப் பற்றி குர்ஆன் குறிப்பிடுவது ‘அஸ்-ஸாமிரி’ என்பதாகும். இது ஒரு தனி நபரைச் சுட்டும் சொல் என்றிருப்பினும் சில ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் அஸ்-ஸாமிரி என்பதை Samaritan சமாரியன் என்று பொருள்படும் வகையில் மொழி பெயர்த்துள்ளனர்.

சமாரியன் என்றால் சமாரியர் என்ற இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் கி.மு 722 வரை சமாரியர்கள் என்ற இனம் இருந்ததாக எந்தவொரு சரித்திரமும் இல்லை. மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து உருவான ஓர் இனத்தைச் சேர்ந்தவன் மூஸா (அலை) அவர்களின் சமுகத்தில் வாழ்ந்ததாக குர்ஆன் கூறுவது சரித்திர தவறாகும் என்பது தான் கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டு!

கிறிஸ்தவர்களின் இக்குற்றச் சாட்டுக்கு மூல ஆதாரம் பைபிள் ஒன்று மட்டுமே! வரலாறுகளைப் பொறுத்தவரை உறுதி செய்யப்படாத, ஒன்றுக் கொன்று நேர் முரண்பட்ட தகவல்களை பைபிள் உள்ளடக்கியுள்ளது என்பது கிறிஸ்தவ அறிஞர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது ஆகும். இந்நிலையில் குர்ஆனில் குறிப்பிடப்பட்ட சரித்திரக் குறிப்புகளை பைபிளை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்குவது அடிப்படையிலேயே தவறானதாகும் என்று ஒரே வரி மறுப்பு இதற்குப் போதுமானதாகும். எனினும் சிந்தனையுடையவர்கள் சிந்திக்கும் பொருட்டு இது குறித்த மேலதிக விபரங்களை விரிவான ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் காண்போம். இச்சம்பவத்தை விவரிக்கும் குர்ஆன் வசனங்களைக் காண்க.

“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை ‘ஸாமிரி’ வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் ‘அர்ரஹ்மானே’ ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
“மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார். நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

(இதற்கு ஹாரூன்;) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; ‘பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

“ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரீ பதில்) சொன்னான்

“நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார். (20: 85-97)
மேற்கண்ட வசனங்களில் இஸ்ரவேலர்களை வழிகேட்டில் ஆக்கிய நபரைப் பற்றிய குறிப்புகளில் எல்லாம் சாமிரி என்ற ஒரு தனி நபரையே குர்ஆன் குறிப்பிடுகிறது. சாமிரி என்ற இந்த தனி நபர் சமாரியர் என்ற இனத்தைச் சேர்ந்தவர் என்று கருதினாலும் அதிலும் குர்ஆன் முரண்படவில்லை, தவறான தகவல்களைத் தரவில்லை என்பதையே இது சம்மந்தமான ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அத்தகைய ஆதாரங்கள் அகில இறைவனிடமிருந்து இறக்கியருளப்ட்ட குற்றம் குறைபாடுகளற்ற மகத்துவம் மிக்க இறைவேதமே குர்ஆன் என்பதற்கு சான்றுகளாக உள்ளன!

ஒரு சமுதாயம் பல்வேறு அடிப்படைகளில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறது. முக்கியமாக தேச, மொழி மற்றும் மத பாரம்பரியங்களைக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றன. இந்தியர் என்பது தேசத்தையும், முஸ்லிம் என்பது மதத்தையும், தமிழர் என்பது மொழியையும் அடையாளப்படுத்துவதை நாம் நன்கறிவோம்.

சமாரியர்களை கிறிஸ்தவர்கள் அடையாளப் படுத்துவது ஓர் இடத்தை அல்லது பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டாகும்.
கி.மு 870ல் உம்ரி என்ற இஸ்ரவேல் மன்னனின் ஆட்சிகாலத்தில் சமரியா என்ற நகரம் உருவானது என்று பைபிளின் பழய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

“யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னினரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான், அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னம் பேரைத் தரித்தான்”. (1ராஜாக்கள் 16:23, 24)

கி.மு 722 காலத்தில் அசீரியர்கள் சமாரியாவை வென்ற பின் அங்கு குடியமர்த்தப்ட்ட மக்களும் அவர்களின் பின்தோன்றல்களுமே சமாரியர்கள் என்று பைபிளை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.

மோசே மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்டதே சமாரியாப் பட்டணம். அப்பட்டணத்தைச் சார்ந்தவர்கள் சமாரியர்கள் என்றழைக்கப்பட்டனர். இவ்வாறிருக்க ஒரு சமாரியன் மோசேயின் காலத்தில் காளைக் கன்றை வணங்குமாறு கூறி இஸ்ரவேலர்களை வழிகெடுத்தான் என்பது சரித்திரத் தவறு அல்லவா? முஹம்மது (ஸல்) அவர்கள் பைபிளின் சரித்திரத்தை தவறாகப் புரிந்து கொண்டு குர்ஆனில் எடுத்தெழுதியபோது ஏற்பட்ட பிழையாக இதனைக் கருதலாம் அல்லவா? கிறிஸ்தவ விமர்சனம் இவ்வாறு செல்கிறது.

சமாரியர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடும் வார்த்தை இரண்டாம் ராஜாக்கள் 17 ஆம் அத்தியாயம் 29 ஆம் வசனத்தில் இடம் பெறுகிறது.

“ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.” (II ராஜாக்கள் 17:29)ஹீப்ரு பைபிளில் இவ்வசனம் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
(Courtesy to: http://www.islamic-awareness.org/)

ஹீப்ரு பைபிளில் ‘ஷம்ரோனிம்’ என்ற வார்த்தை (அடிக்கோடிடப்பட்டது)சமாரியர் என்று தமிழிலும் samaritan என்று ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் சமாரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.
ஆனால் சமாரியர்கள் இதற்கு சற்று நிகரான உச்சரிப்பை உடைய ஆனால் முற்றிலும் வேறுபட்ட ஒரு பொருளைத் தரக்கூடிய ஒரு வார்த்தையால் தம்மை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர் என்பதை கிறிஸ்தவ உலகம் தந்திரமாக மூடி மறைத்து விட்டது!
அவர்கள் தம்மை அடையாளப்படுத்த ஷாமெரின்(Shamerin என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் தோரா என்னும் வேதத்தைப் பாதுகாப்பவர்கள் அல்லது அதைப் பற்றிப் பிடித்து வாழ்பவர்கள் என்பதாகும்.
… the Samaritans prefer to style themselves ‘Shamerim’ i.e., “the observant” – rather than ‘Shomeronim’ i.e., “the inhabitants of Samaria.” -Samaritans” in G. A. Buttrick (Ed.), The Interpreter’s Dictionary Of The Bible, Volume 4, 1962 (1996 Print), Abingdon Press, Nashville, p. 191(Courtesy to: http://www.islamic-awareness.org/)
மோசேவுக்குப் பின்னர் உருவானவர்களே சமாரியர்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் இது தொடர்பான விரிவான ஆய்வுகளும் சமாரியர்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளும் சமாரியர்களுக்கு மிகப் பழமையான வரலாறு உள்ளது என்பதைத் தெளிவு படுத்துகிறது !
தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்றும் வேதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் வாதிக்கும் ஓர் இனத்தைப் பற்றி ஹார்பர்ஸ் பைபிள் அகராதியும் (Harpers Bible Dictionary) கூறுகிறது. இவர்கள் தங்களை ஷாமெரிம் (Shamerim) என்று அழைக்கிறார்கள். வேதத்தை முறையாகப் பின்பற்றுபவர்கள் என்பது இதன் பொருளாம்.
“ஒரு மதப் பிரிவினர்கள் என்ற முறையில் சமாரியர்கள் ஒழுக்க நெறி மிக்கவர்களாகவும் தோராவைப் பற்றிப்பிடித்து வாழ்பவர்களாகவும் தங்களின் மத பாரம்பரியத்தில் அபிமானம் கொளக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். புராதன இஸ்ரவேல் கற்பித்த மதத்தை யூதர்களை விட தாங்களே உண்மையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் அவர்கள் தங்களைக் குறித்து கூறுகிறார்கள். தங்களைக் குறித்து அவர்கள் கூறுவது “ஷாமெரிம்” (தோராவைக் கடைபிடிப்பவர்கள்) என்றாகும். யூதாவின் பின்தோன்றல்கள் யூதர்கள் என்பதைப் போல புராதன கால யோசேப்பின் பின்தோன்றல்களே தாங்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்." (Harpers Bible Dictionary Page 899 – Quoted by M.M Akbar)
சமாரியர்களைக் குறித்து அவர்கள் சமரியாப் பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிட்டாலும் சமாரியர்கள் தங்களின் மூதாதையர்களைப் பற்றித் தரும் செய்திகள் இதற்கு மாற்றமாக உள்ளன.
ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தைக் குறித்து அவர்களின் எதிர் தரப்பினர் தரும் செய்திகளை விடவும் அச்சமுதயாயத்தினர் சுயமாகவே தரும் தங்களின் பூர்வீகத்தைப் பற்றிய குறிப்புகள் வலிமை மிக்கது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சமாரியர்கள் எனப்படுவோர் தங்களை மத பாரம்பர்யம் உடையவர்களாகவும், ‘தோரா’ என்ற வேதத்தைக் கடைபிடிப்பவர்களாகவும் யோயேசப்பின் பின்தோன்னறல்களே தாங்கள் என்றும் தங்களை அவர்கள் அடையாளப் படுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட் ஆதாரங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் (Encyclopaedia Britanica) சமாரியர்களைக் குறித்து குறிப்பிடுவதாவது:
The Samaritans call themselves Bene-Yisrael (“Children of Israel”), or Shamerim (“Observant Ones”), for their sole norm of religious observance is the Pentateuch (first five books of the Old Testament). Other Jews call them simply Shomronim (Samaritans); in the Talmud (rabbinical compendium of law, lore, and commentary), they are called Kutim, suggesting that they are rather descendants of Mesopotamian Cuthaeans, who settled in Samaria after the Assyrian conquest.
சமாரியர்கள் தங்களை இஸ்ரவேலின் புத்திரர்கள் என்றும் “ஷாமெரிம்” (வேதத்தை கடைபிடிப்பவர்கள்) என்றும் அழைக்கின்றனர். ஏனெனில் அவர்களுடைய மத வழிபாடுகளின் அடிப்படையாக விளங்குவது பஞ்ச ஆகமங்களாகும். பிற யூதர்கள் அவர்களை ” ஷொம்ரொனிம்” Shomronim (சமரியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்கள்) என்று அழைக்கின்றனர். தல்ம (து என்னும் யூதர்களின் வேதத்)தி ல் அவர்களைக் (kutim) கூத்திம் என்று கூறப்பட்டுள்ளது. அசீரியர் வெற்றிக்குப் பின்னர் சமாரியாவில் குடியேறிய மெசப்பட்டோமியாவைச் சேர்ந்த கூத்தியர்களின் சந்ததிகள் என்ற எண்ணத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். (”Samartian” Encyclopaedia Britanica – online edition.)
யூதர்களின் கலைக் களஞ்சியமாகிய என்சைக்ளோபீடியா ஜூதாயிகா (The Encyclopaedia Judaica) சமாரியர்களின் பூர்வீகத்தைப் பற்றிய முக்கிய குறிப்பொன்றைத் தருகிறது. தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்று வாதிடும் சமாரியர்களின் வாதத்திற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளதாக யூதர்களின் கலைக் களஞ்சியம் குறிப்பிடுவதைப் பாருங்கள் :
Until the middle of the 20th century it was customary to believe that the Samaritans originated from a mixture of the people living in Samaria and other peoples at the time of the conquest of Samaria by Assyria (722–721 BCE). The Biblical account in II Kings 17 had long been the decisive source for the formulation of historical accounts of Samaritan origins. Reconsideration of this passage, however, has led to more attention being paid to the Chronicles of the Samaritans themselves. With the publication of Chronicle II (Sefer ha-Yamim), the fullest Samaritan version of their own history became available: the chronicles, and a variety of non-Samaritan materials. According to the former, the Samaritans are the direct descendants of the Joseph tribes, Ephraim and Manasseh, and until the 17th century CE they possessed a high priesthood descending directly from Aaron through Eleazar and Phinehas. They claim to have continuously occupied their ancient territory and to have been at peace with other Israelite tribes until the time when Eli disrupted the Northern cult by moving from Shechem to Shiloh and attracting some northern Israelites to his new followers there. For the Samaritans, this was the ’schism’ par excellence.(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)
சமாரியாவில் வாழ்ந்தவர்களும் அசீரியர்கள் சமாரியாவை வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் (கி.மு722) குடியேற்றப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு கலப்பினமே சமாரியர்கள் என்பதுதான் இருபதாம நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரையிலான நம்பிக்கையாக இருந்தது. பைபிளின் இரண்டாம் ராஜாக்கள் 17 ஆம் அத்தியாயம் இப்படி ஒரு நம்பிக்கை கொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. பைபிளின் இந்த நிலைபாடு மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆய்வில் சமாரியர்களின் புராதன ஆவணங்களுக்கு தனிக் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. செபர்ஹா-யாமிம் என்ற (சமாரியர்களின்) இரண்டாம் நாளாகமம் Chronicle II (Sefer ha-Yamim) வெளியிடப்பட்டதோடு சமாரியர்களின் வரலாறு முழுமையான வடிவத்தில் கிடைக்கப் பெற்றன. அத்துடன் அவர்களல்லாத மற்றவர்களைக் குறித்த சில குறிப்புகளும் அதில் காணப்பட்டன.
இதனடிப்படையில் யோசேப்பின் குலத்தவராகிய எப்பிராயீம், மானேசா முதலானவர்களின் நேரடி வழித்தோன்றல்களே சமாரியர்கள் ஆவர். மேலும் 17 நூற்றாண்டு வரை ஆரோன் முதற்கொண்டு எலியாசர் மற்றும் ஃபினெஹாஸ் வழியாக மாபெரும் புரோகிதத்துவத்தையும் அவர்கள் உரிமை கொண்டாடினர்.
வடக்கு மகாணத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களை தன்னுடைய மத ஆச்சாரங்களின்பால் பால் ஈர்ப்பதற்காக சேகேமிலிருந்து ஷீலோஹ் என்ற இடத்தில் மாற்றிக் கொண்டு அவர்களின் கலாச்சாரத்தில் சீர்குலைவு ஏற்படுத்திய ஏலீ என்பவரின் காலம் வரை இஸ்ரவேலர்களுடன் தாங்கள் சமாதானமாக வாழ்ந்ததாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். சமாரியர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. .(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)
கிறிஸ்தவர்கள் கூறுவதைப் போன்று கி.மு 722 ல் உருவானது அல்ல சமாரியர் என்ற சமூகம், மாறாக அதற்கு முன்னரே, யோசேப்பில் இருந்தே அவர்களின் பூர்வீகம் துவங்குகிறது என்பதை பல உறுதியான சான்றுகளைக் கொண்டு நிரூபித்துள்ளோம். ஷாமெரிம் அல்லது ஷாமெரின் என்ற வார்த்தையை ‘ஷம்ரோனிம்’ என்று மாற்றம் செய்த போது சமாரியர் என்ற இனம் ஒரு பிரதேசத்துடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்டது என்பதைத் தவிர இதற்கு வேறு அடிப்படைகள் இல்லை.
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோசேயின் காலத்திலும் வாழ்ந்து அவர்களில் ஒருவன் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி அதை வணங்குமாறு இஸ்ரவேலர்களிடம் கூறி அவர்களை வழிகெடுத்தான் என்றும் அவனைப் பற்றி ‘ஸாமிரி’ (சமாரியன்) என்று குர்ஆன் குறிப்பிட்டால் அது சரித்திர தவறு என்று எவ்வாறு கூற முடியும்?
மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை” என்று சரித்திரத்தில் நுனிப்புல் மேய்ந்து விட்டு அல்லது சரித்திரம் என்றால் அது பைபிள் மட்டுமே என்று மனப்பால் குடித்துக் கொண்டு அல்லது அறிந்து கொண்டே உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு குர்ஆனின் மீது விமர்சனம் வைத்த கிறிஸ்தவர்கள் இனியேனும் உண்மையை அறிந்து கொள்வார்களாக. சத்திய இறைவேதத்தின் பால் தங்கள் கவனத்தை செலுத்துவார்களாக.



" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)
காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை வழிகெடுத்தது சாமிரியா? அல்லது பைபிள் கூறுவதைப் போன்று இறைதூதர் (ஆரோன் என்னும்) ஹாரூனா? என்பது குறித்து விரைவில் அடுத்த தொடரில்…
Published in: Islamkalvi

2 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறப்பான கட்டுரை தொடர்ந்து இது போன்ற பதிலடிகளை கொடுத்து கொண்டே இருக்கவும், நீண்ட இடைவெளி விட வேண்டாம்.

அபூ அப்திர்ரஹ்மான் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்.

நன்றி சகோதரரே! நமக்கு இடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இன்ஷா அல்லாஹ் இனிமேல் தொய்வுகள் இன்றி வீரியத்துடன் செயல்படுவோம். துஆ செய்யுங்கள்!

அன்புடன் அபூ அப்திர்ரஹ்மான்