ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று
பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு
அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும்
இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப்
பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின்
போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!
இஸ்லாம் படைத்த இறைவனின் இயற்கை மார்க்கமாகும். அதனை ஏற்றுக்கொண்டவனே முஸ்லிம்.
ஒரு முஸ்லிமின் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இஸ்லாம் முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பிற மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. மேன்மை மிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
"மார்க்க விஷயத்தில் உங்களுடன் எவர் போரிடவில்லையோ, இன்னும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றவில்லையோ
அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை விட்டும், அவர்களின்
பால் நீங்கள் நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை - நிச்சயமாக
அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்" (அல்குர்ஆன் 60 அல் மும்தஹினா:8)
இஸ்லாமல்லாத பிற மதத்தவர்கள் பகிரங்கமாக இஸ்லாமுடன் போர் தொடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லையென்றும் அவர்களுடன் நீதியுடன்
நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் நீதிமான்களுக்கெல்லாம் நீதிபதியாகிய
அல்லாஹ் அறிவிக்கின்றான்.
தெளிவான நீதி மிக்க ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் பிற மதத்தவர் வணங்கும்
கடவுளர்களை ஏசுவதையும் தடை செய்துள்ளது.
அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போர நீங்கள் திட்டாதீர்கள், அப்போது அவர்கள் அறிவின்றி, வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் (6 அல்அன்ஆம் 108)
ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும்
இஸ்லாம் எந்நிலையிலும் அதன் கொள்கைக் கோட்பாடுகளில் சிஞ்சிற்றும் விட்டுக்கொடுத்தல்களை
ஏற்பதில்லை. அக்காரணத்தால் தான் இஸ்லாம் அதன் கொள்கையில் தனித்து விளங்குகிறது. தெளிந்த
நீரோடை போன்ற குழப்பமற்ற இறைகொள்கையில் அது என்றும் நிலைத்து நிற்கிறது. காரணம்
அது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனிடமிருந்துள்ள வழிகாட்டுதல் ஆகும்.
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உண்மையானவன், அவனையன்றி நிச்சயமாக எதை அவர்கள் அழைக்கின்றார்களோ அது பொய்யானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உயர்வானவன், மிகப்பெரியவன் என்ற காரணத்தினாலாகும் (22 அல்ஹஜ் 62 மேலும் பார்க்க 31:30)
இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய
இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது
இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம்.
அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன்
என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப்
போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும்
கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன்
இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.
"நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மர்யமுடைய குமாரர்
மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 17, 72)
"நிச்சயமாக அல்லாஹ் - மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள்
திட்டமாக (அவனை) நிராகரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 73)
(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே!
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்! அவன் (எவரையும்) பெறவுமில்லை, அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை! இன்னும் அவனுக்கு
நிகராக எதுவுமில்லை! (அல்குர்ஆன் 112: 1-4)
இஸ்லாமின் உறுதியான இறைக் கோட்பாட்டையும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்த இஸ்லாமிய
நிலைபாட்டையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன!
அடுத்ததாக, கிறிஸ்துமஸ் என்பது என்ன? இயேசுவின் பிறந்த தினம்! இதனை அவர்கள் கொண்டாடுகின்றனர்! இதற்காக வாழ்த்துக்கள் பரிமாறப்படுகின்றன! ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே யாருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது? எந்த நம்பிக்கையின்
அடிப்படையில் அது கொண்டாடப்படுகிறது? என்பதுதான் முக்கியம்.
கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இன்னும் அவரையே கர்த்தர் என்றும் நம்புகின்றனர். அப்படியானால் டிஸம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர்களின் நம்பிக்கைப் படி அல்லாஹ்வுடைய மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
அவர்களின் இந்த நம்பிக்கையை வல்லமை மிக்க அல்லாஹ் இவ்வாறு மறுத்துக் கூறுகின்றான்.
உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர், (அவ்வாறே ஈஸா) மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன் என்று கிறிஸ்தவர்கள்
கூறுகின்றனர், இது அவர்களுடைய வாய்களால் கூறும் (ஆதாரமில்லா வெற்றுக்) கூற்றாகும்.
(இவ்விஷயத்தில் அவர்களுக்கு) முன்பிருந்த நிராகரிப்பாளர்களின் சொல்லுக்கு அவர்கள்
ஒப்பாகின்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்)
திருப்பப்படுகின்றனர்?
(9 அத்தவ்பா 30)
அல்லாஹ்வுடைய தூதரான ஈஸா மஸீஹ் (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்ற அவர்களின் கூற்று
ஆதாரமற்ற இட்டுக் கட்டுதல் என்பது மட்டுமல்ல, இது அல்லாஹ்வின் உயர்ந்த
தன்மைகளில் அவர்கள் ஏற்படுத்திய களங்கமாகும்! இப்பேரணடத்தையே அதிர வைக்கும் மிகப்பெரிய அபாண்டமாகும்! வல்லமையும் மேன்மையும்
மிக்க அல்லாஹ் பறைசாற்றுகிறான்:
இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள்
கூறுகிறார்கள். "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்)
கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து
பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்!. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று
அவர்கள் அழைப்பதனால்-(இவை நிகழ்ந்து விடக்கூடும்) ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத்
தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய்
வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர்களில்
ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
(19 மர்யம் 88-95)
அது மட்டுமல்ல, அவர்களுடைய இந்த இட்டுக்கட்டுதலைக் கூறும் இடங்களில் அதைவிட்டும் அல்லாஹ் மிகத்தூயவன்
என்று அவனது பரிசுத்தத் தன்மையைப் பறைசாற்றுகிறான்.
மேலும், அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள்
கூறுகின்றனர், (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மகாத் தூய்மையானவன் - அன்றியும்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவை, அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (2 அல்பகரா: 116) மேலும் (10:68, 21:26)
இன்னும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் அவனது வல்லமைகளையும் திருநாமங்களையும் பற்றி எடுத்துக்
கூறும் இடங்களிலும் அவன் தனக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு
நாடியிருந்தால் அவன் அதை செய்திருப்பான், ஆனால் அதை விட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கிறான் என்றும் பறைசாற்றுகிறான்.
"அன்றியும், (தனக்குச்)
சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே
அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர்
கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (17 அல்-இஸ்ரா 111)
அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
(25:2)
"இன்னும் நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது, அவன்
எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, புதல்வனாகவோ
எடுத்துக்கொள்ளவில்லை. (72 அல்ஜின்னு 3)
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும்
இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை
இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6 அல்அன்ஆம்: 101)
இன்னும் பின் வரும் வசனம் மிகவும் சிந்தனைக்குரியதாகும்!
நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக
இருந்திருப்பேன்!" (43:81)
முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். இந்த சமுதாயத்துக்கு எல்லா வகையிலும்
சிறந்த முன்மாதிரி ஆவார்கள். அல்லாஹ்வுக்கு ஒரு பிள்ளை என்று இருந்திருந்தால் அதை நானே
முதலில் வணங்கி உங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு வல்லமை மிக்க
அல்லாஹ் அவர்களிடம் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கென
ஒரு மகனை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவன் எடுத்துக் கொண்டான் என்ற கிறிஸ்தவக்
கோட்பாட்டுக்கு இவ்வசனம் தெளிவான உறுதியான, அறிவுப்பூர்வமான மறுப்பாகவும்
இருந்துகொண்டிருக்கிறது.
மேலும் குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது இவ்வேதமானது
- அல்லாஹ் தனக்கு ஒருமகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்லக்கூடியவர்களை எச்சரிப்பதற்காகவும்
இறக்கப்பட்டது என்று கூறுகிறான்.
"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையோனென்றால் தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான் - அதில் எத்தகைய
கோணலையும் அவன் ஆக்கவில்லை. மிக்க உறுதியானதாக - அவனிடமிருந்து கடினமான தண்டனையை எச்சரிக்கை
செய்வதற்காகவும், நற்செயல்கள் செய்கின்ற
நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி உண்டு என்று நற்செய்தி
கூறவதற்காகவும் (இதனை இறக்கினான்) அதில் என்றென்றும் அவர்கள் தங்கியவர்களாக இருப்பர்.
அன்றியும், அல்லாஹ் மகனை எடுத்துக்
கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்) அவர்களுக்கு இதைப்பற்றி எவ்வித அறிவும் இல்லை, அவர்களுடைய மூதாதையர்களுக்கும் இல்லை, அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த வாக்கியம்) மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்.; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. (18 அல்கஹ்ஃப்: 1-5)
ஒரு தனிநபருடைய சந்தோஷமான நிகழ்ச்சிக்கு அவருடைய நண்பரோ அல்லது உறவினர்களோ வாழ்த்து
கூற வேண்டும் என்றால் வாழ்த்து கூறுபவர் உளப்பூர்வமாக அந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருக்க
வேண்டும். அதில் அவர் திருப்தி கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது உளப்பூர்வமான
வாழ்த்தாக அமைவதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அமைந்து விடும்! இது ஒரு நயவஞ்சகத்தனமான
செயல்பாடு ஆகும். இத்தகைய போலியான பாசாங்குகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக்
கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட
நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.
ஆக கிறிஸ்துமஸ் விழா என்பது அல்லாஹ்வுடைய மகனாக அவர்கள் ஏற்படுத்திய இயேசுவின்
பிறந்த நாளாகும். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லது மறுத்துக் கொண்டு பாசாங்கான நிலையில்
அன்றி ஒரு முஸ்லிமால் வாழ்த்து சொல்ல இயலாது. இந்த இரண்டு நிலைகளுமே இஸ்லாமுக்கு முரணானதாகும்.
இது அல்லாமல் கிறிஸ்தவ அன்பர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நன்மை செய்வதையும்
நல்லுறவைப் பேணுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனவே உங்கள் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்துமஸ்
விசேட நிகழ்ச்சிக்கு அல்லது விருந்துக்கு உங்களை அழைத்தால் அல்லது அதற்கான உணவுகளை
உங்களுக்கு அழைத்தால் அதை மவுனமாக ஏற்றுக்கொள்வதை விடுத்து இந்த அரிய சந்தர்ப்பத்தை
பயன்பபடுத்தி நேர்வழியின் பால் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதே ஏற்றமான செயலாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நிலைத்திலருக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக!
1 comments:
Very good article it indicates to make useful opportunity as much we can to introduce Islamic ideology about isa pbuh and maryam pbuh.
Post a Comment