Tuesday, December 15, 2009

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi

இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய 'ஆரோன்' அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இறைதூதர்கள் எனப்படுவோர் மனித சமுதாயத்தை நல்வழியின் பால் அழைப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்ட்ட சத்திய சீலர்கள். மக்களை நல்வழிப்படுத்த எல்லா வகையிலும் பிறருக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். அறவழியில் தமக்கு ஏற்படும் இன்னல்களை அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மகான்களையே இறைவன் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுபதேசங்களை உள்ளடக்கிய வேதங்களையும் வழங்குகிறான்.

இந்த அடிப்படையைத் தான் திருக்குர்ஆனும் பைபிளும் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
நோவா என்னும் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது:
"நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது." (ஆதி-6:8)
"தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்." (ஆதி-6:9)

நபிமார்கள் என்ற தீர்க்கதரிசிகளைக் குறித்து குர்ஆன் இப்படிக் குறிப்பிடுகிறது:

"நிச்சயமாக (தூதர்களாகிய) அவர்கள் நன்மைகளில் விரைந்து செல்பவர்களாகவும், (நம் அருளில்) ஆசை கொண்டும், (நம் தண்டனையை) பயந்தும், நம்மை (பிரார்த்தித்து) அழைப்பவர்களாகவும் இருந்தனர் - இன்னும், நம்மிடம் உள்ளச்சம் கொண்டோராகவும் இருந்தனர்" (21 அல் அன்பியா 90)

இறை வழியில் மக்களை நடத்துபவர்கள் மக்களில் மிகச் சிறந்தவர்களாக, சாதாரண மக்கள் செய்யும் தீய செயல்களில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். இது தான் நீதிக்கு மிக நெருக்கமானது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் காவல் துறை ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் நற்குணம், நற்சான்று முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுண்டு. சட்டத்தை நிலை நாட்டக் கூடியவர்கள் சட்டத்தை மீறக்கூடாது என்ற அடிப்படையில். திருட்டு, கொள்ளை கொலை வழக்கில் ஈடுபட்டவனை அரசாங்கம் காவல் துறைக்கு தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக பிடித்து தண்டனை வழங்கும். உலகியல் நியதி இவ்வாறிருக்க, நீதிமான்களுக் கெல்லாம் நீதிமான் ஆகிய வல்ல இறைவன் மக்களை நீதியின் பால் வழி நடத்த வேண்டிய தீர்க்கதரிசிகளை பாவிகளிலிருந்து தேர்ந்தெடுக்க மாட்டான். பாவம் செய்த பின்னரும் அப்பதவியில் நீடிக்க விட மாட்டான். இறைவனின் நியதி இயற்கையானதாகும். இந்த அடிப்படையில் இஸ்ரவேலர்களின் காளைக் கன்றின் சிலை வழிபாடு குறித்து ஆராய்வோம்.

நன்மைகளை அழிக்கும் செயலாக சுவர்க்கம் செல்வதை தடை செய்யும் பாவமாக திருக்குர்ஆன் இணைவைப்பைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. (பார்க்க: 39:66, 5:72)

சிலை வழிபாட்டை மிகப் பெரிய பாவமாக பைபிளும் எடுத்துக் காட்டுகிறது. மோசேவுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளாக பைபிள் கூறும் வசனங்களில் இஸ்ரவேலர்களில் சிலை வணக்கம் செய்யபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவுக்கு மிகப் பெரிய பாவச் செயலாக சிலை வணக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசேவுக்கு கர்த்தர் வழங்கியதாகக் கருதப்பட்ட கட்டளையில் பைபிள் இவ்வாறு கூறுகிறது.

"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்" (உபாகமம் - 17: 2-5)
(இன்னும் பார்க்க: உபாகமம் 13 ஆம் அத்தியாயம்)

சிலை வணக்கம் என்ற பாவத்தைச் செய்த காரணத்தால் மூவாயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர் என்றும் பைபிள் கூறுகிறது. (பார்க்க – யாத்திராகமம் 32:25-28)

இப்படியிருக்க இப்பாவச் செயலை செய்வதற்கு ஒரு தீர்க்கதரிசியானவரே துணை நின்றார் என்பது ஏற்புடையதா? இல்லை. மாறாக வரலாற்றைத் தொகுத்த பைபிள் ஆசிரியர்களுக்கு பெயரைக் குறிப்பிட்டதில் ஏற்பட்ட ஒரு பிழையாகவே இதனைக் கருத இயலும். இச்சம்பவம் குறித்து பைபிள் தரும் செய்திகளும் அவ்வாறு கருத இடமளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

ஒரு தண்டனைக்குரிய பாவச் செயலை ஆரோன் செய்தார் எனில் மூவாயிரம் பேருடன் அவரும் சேர்த்து தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். சிலை வணக்கம் செய்தவர்களை விட சிலையைச் செய்து மக்களுக்கு வழங்கியவரை முதலில் தண்டிக்கவேண்டும். (இதுதான் நீதி மிக்க செயல்!) மாறாக, இச்சம்பவம் நடந்த பிறகும் பைபிளில் மிக முக்கிய இடம் பிடிக்கும் பெரும் கண்ணியத்திற்கு உரியவராக ஆரோன் சித்தரிக்கப் படுகிறார். அச்சம்பவத்திற்குப் பிறகு கர்த்தரால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றும் நிரந்தரமான புரோகிதத்துவப் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்றும் பைபிள் கூறுகிறது. இதுவே இப்பாவச் செயலை ஆரோன் செய்யவில்லை, இது வரலாற்றை எழுதியபோது ஏற்பட்ட பிழை என்பதற்கான சான்றாக விளங்குகிறது.

இச்சம்பவம் குறித்த பைபிளின் வரிகளைக் காண்க:

''ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு, பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள். அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்" (யாத்திராகமம் - 32: 25-28)

சிலை வணக்கம் என்ற பெரும் பாசவச் செயலைச் செய்தவர்களைக் கொல்லும் படி மோசே கட்டளையிட்டார். அவ்வாறே மூவாயிரம் பேர் கொல்லப்பட்டதாக மேற்கண்ட வரிகளக் கூறுகின்றன. இதில் ஆரோன் கொல்லப்ட்டதாகத் தகவல் இல்லை. மாறாக இச்சம்பவத்திற்குப் பின்னரும் பலகாலம் ஆரோன் உயிருடன் இருந்ததாகவே பைபிள் கூறுகின்றது. உண்மையில் ஆரோன் தான் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை பாவத்தின் பால் தூண்டியிருப்பின் கர்த்தரின் கட்டளைப் பிரகாரம் அவரை முதலில் கொலை செய்ய மோசே ஏவியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன் சொந்த சகோதரனை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கொலை செய்து மோசே அநீதி இழைத்தார் என்று கூய இயலுமா? நிச்சயமாக இல்லை. மோசேயின் கட்டளைப் பிரகாரம் தண்டிக்கப்பட்டவர்களுடன் ஆரோன் இல்லை என்பதே அவர் இப்பாவச்செயலை செய்திருக்க முடியாது என்பதைத் தெளிவு படுத்துகிறது. மட்டுமல்ல, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு நிரந்தரமான குருகுலப் பதவிக்கு உரித்தாக்கப்பட்டவர். அவரே அப்படிப்பட்ட பெரும்பாவத்தைச் செய்யத் தூண்டினார் என்றால் அதற்குப் பின்னரும் அவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றிருக்கையில் சாதாரண மக்கள் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதில் என்ன தவறு? என்று நியாயம் கற்பிக்க நேரிடும். ஆரோனை மட்டும் இப்பாவத்தைச் செய்தபின்னரும் ஆசீர்வதித்த இறைவன் சாதாரண மக்களை இதற்காகக் குற்றம் பிடிப்பது ஏன்? என்ற கேள்வியும் தொடர்ந்து வரும்.

இன்னும் இப்பாவச் செயலைச் செய்த காரணத்தால் தன் சகோதரர்களையும் அயலார்களையும் சினேகிதர்களையும் கொன்று போடும் படி மோசே கட்டளையிட்ட போது ஆரோனை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள் என்று லேவியர்களும் மோசேவிடம் கேள்வி கேட்கவில்லை. அவரின் செயலை விமர்சிக்கவும் இல்லை. ஆரோன் தான் காளைக் கன்றின் சிலையை உருவாக்கியவர் என்றிருப்பின் இதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள் என்று மோசேயை லேவியர்கள் விமர்சித்திர்ப்பர்.

அது மட்டுமா? இப்பாவச் செயலைச் செய்தவர்களின் பெயரை என் புஸ்தகத்திலிருந்து அழித்து விடுவேன் என்று இதே சம்பவத்தைப் பற்றிய பைபிள் வரிகள் கூறுகின்றன.

''அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாகய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.'' (யாத்திராகமம் 32 :33)

இதன் அடிப்படையில் ஆரோன் இப்பாவச் செயலுக்குக் காரணமானவர் என்றிருப்பின் அவரது பெயரே முதலில் அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நடந்ததா? நிச்சயமாக இல்லை. மாறாக, கர்த்தரின் நிறைந்த அருளுக்கும் குரு குல பதவிக்கும் உரியவராகவும் இஸ்ரவேல் சமூகம் நெடுகிலும் போற்றப்படும் மாபெரும் புரோகிதராகவும் ஆரோன் விளங்கினார் என்பதே பைபிளின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும்.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் காளைக் கன்றின் சிலையைச் செய்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்து சிலை வணக்கத்தின் பால் அவர்களைத் தூண்டிய பாவச் செயலை ஆரோன் செய்திருக்க முடியாது என்பது விளங்குகிறது. பிறகு ஏன் அவர் சிலையைச் செய்ததாக பைபிள் கூறுகிறது? அது பைபிள் எழுத்தர்களுக்கு ஏற்பட்ட பிழை என்று எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் திருக்குர்ஆன் விவரிக்கும் ஹாருன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோ சிலை வணக்கத்தைத் தூண்டியவரல்ல, மாறாக அப்பாவச் செயலைத் தடுக்க முயன்று அதனால் இஸ்ரவேலர்கள் அளித்த தொல்லைகளையும் தாங்கிக் கொண்ட தியாக சீலர்! இச்சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் வசனங்களைக் காண்க:

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார். "மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்" என்று அவர்கள் கூறினர். (20: 90, 91)

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார்கள்:

''என் தாயின் மகனே! நிச்சயமாக இந்த சமூகத்தினர் என்னை பலவீனனாகக் கருதி, என்னைக் கொல்வதற்கு முற்பட்டனர்'' (7 அல் அஃராஃப் 150)
நறுக்கு:
பைபிளைத் தழுவி திருக்குர்ஆன் எழுதப்பட்டது என்றால் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை சிலை வழிபாட்டின் பக்கம் தூண்டியது ஆரோன் என்று திருக்குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். அப்படியல்ல! இது குறித்து எதுவுமே அறியாதிருந்த முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அகிலங்களின் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்திகள்! எனவேதான் பைபிளில் இடம் பெற்றதைப் போன்று மக்களைத் தீமையிலிருந்து தடுக்க வேண்டிய தீர்க்கதரிசிகளே அத்தகைய தீமையைச் செய்தனர் என்ற தவறான தகவல் அதில் இடம் பெறவில்லை!

(நபியே!)"இதற்கு முன் எந்த வேதத்தையும் நீர் ஓதிக்கொண்டிருந்தவரல்லர், உம்முடைய வலக் கரத்தால் அதனை நீர் எழுதியவருமல்லர், அப்படி இருந்திருப்பின் பொய்யர்கள் (உம்மைச்) சந்தேகித்திருப்பர்" (29 அல் அன்கபூத் 48)

Saturday, December 5, 2009

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)

" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)


சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?
கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//

குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர்.திருக்குர்ஆனில் சரித்திரத் தவறா? என்ற தொடரின் இரண்டாம் பகுதியில் இது பற்றிப் பார்ப்போம்.

இறைதூதர் மூஸா (அலை) அவர்கள் தவ்றாத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சினாய் மலைக்குச் சென்றிருந்த போது சாமிரி என்ற பொற்கொல்லன் இஸ்ராயீல் சந்ததிகளின் ஆபரணங்களைப் பெற்று நெருப்பில் உருக்கி அதிலிருந்து காளைக் கன்றின் உருவச்சிலையை உருவாக்கி அதனை வணங்குமாறு மக்களிடம் கூறிய சம்பவத்தை திருக்குர்ஆன் 20 அத்தியாயம் 85 முதல் 97 வரையிலான வசனங்களில் விளக்குகிறது.

குறிப்பிட்ட அச்சம்பவத்தில் தொடர்புடைய நபரைப் பற்றி குர்ஆன் குறிப்பிடுவது ‘அஸ்-ஸாமிரி’ என்பதாகும். இது ஒரு தனி நபரைச் சுட்டும் சொல் என்றிருப்பினும் சில ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் அஸ்-ஸாமிரி என்பதை Samaritan சமாரியன் என்று பொருள்படும் வகையில் மொழி பெயர்த்துள்ளனர்.

சமாரியன் என்றால் சமாரியர் என்ற இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் கி.மு 722 வரை சமாரியர்கள் என்ற இனம் இருந்ததாக எந்தவொரு சரித்திரமும் இல்லை. மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து உருவான ஓர் இனத்தைச் சேர்ந்தவன் மூஸா (அலை) அவர்களின் சமுகத்தில் வாழ்ந்ததாக குர்ஆன் கூறுவது சரித்திர தவறாகும் என்பது தான் கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டு!

கிறிஸ்தவர்களின் இக்குற்றச் சாட்டுக்கு மூல ஆதாரம் பைபிள் ஒன்று மட்டுமே! வரலாறுகளைப் பொறுத்தவரை உறுதி செய்யப்படாத, ஒன்றுக் கொன்று நேர் முரண்பட்ட தகவல்களை பைபிள் உள்ளடக்கியுள்ளது என்பது கிறிஸ்தவ அறிஞர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது ஆகும். இந்நிலையில் குர்ஆனில் குறிப்பிடப்பட்ட சரித்திரக் குறிப்புகளை பைபிளை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்குவது அடிப்படையிலேயே தவறானதாகும் என்று ஒரே வரி மறுப்பு இதற்குப் போதுமானதாகும். எனினும் சிந்தனையுடையவர்கள் சிந்திக்கும் பொருட்டு இது குறித்த மேலதிக விபரங்களை விரிவான ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் காண்போம். இச்சம்பவத்தை விவரிக்கும் குர்ஆன் வசனங்களைக் காண்க.

“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை ‘ஸாமிரி’ வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் ‘அர்ரஹ்மானே’ ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
“மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார். நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

(இதற்கு ஹாரூன்;) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; ‘பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

“ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரீ பதில்) சொன்னான்

“நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார். (20: 85-97)

மேற்கண்ட வசனங்களில் இஸ்ரவேலர்களை வழிகேட்டில் ஆக்கிய நபரைப் பற்றிய குறிப்புகளில் எல்லாம் சாமிரி என்ற ஒரு தனி நபரையே குர்ஆன் குறிப்பிடுகிறது. சாமிரி என்ற இந்த தனி நபர் சமாரியர் என்ற இனத்தைச் சேர்ந்தவர் என்று கருதினாலும் அதிலும் குர்ஆன் முரண்படவில்லை, தவறான தகவல்களைத் தரவில்லை என்பதையே இது சம்மந்தமான ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அத்தகைய ஆதாரங்கள் அகில இறைவனிடமிருந்து இறக்கியருளப்ட்ட குற்றம் குறைபாடுகளற்ற மகத்துவம் மிக்க இறைவேதமே குர்ஆன் என்பதற்கு சான்றுகளாக உள்ளன!

ஒரு சமுதாயம் பல்வேறு அடிப்படைகளில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறது. முக்கியமாக தேச, மொழி மற்றும் மத பாரம்பரியங்களைக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றன. இந்தியர் என்பது தேசத்தையும், முஸ்லிம் என்பது மதத்தையும், தமிழர் என்பது மொழியையும் அடையாளப்படுத்துவதை நாம் நன்கறிவோம்.

சமாரியர்களை கிறிஸ்தவர்கள் அடையாளப் படுத்துவது ஓர் இடத்தை அல்லது பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டாகும்.
கி.மு 870ல் உம்ரி என்ற இஸ்ரவேல் மன்னனின் ஆட்சிகாலத்தில் சமரியா என்ற நகரம் உருவானது என்று பைபிளின் பழய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

“யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னினரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான், அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னம் பேரைத் தரித்தான்”. (1ராஜாக்கள் 16:23, 24)

கி.மு 722 காலத்தில் அசீரியர்கள் சமாரியாவை வென்ற பின் அங்கு குடியமர்த்தப்ட்ட மக்களும் அவர்களின் பின்தோன்றல்களுமே சமாரியர்கள் என்று பைபிளை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.

மோசே மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்டதே சமாரியாப் பட்டணம். அப்பட்டணத்தைச் சார்ந்தவர்கள் சமாரியர்கள் என்றழைக்கப்பட்டனர். இவ்வாறிருக்க ஒரு சமாரியன் மோசேயின் காலத்தில் காளைக் கன்றை வணங்குமாறு கூறி இஸ்ரவேலர்களை வழிகெடுத்தான் என்பது சரித்திரத் தவறு அல்லவா? முஹம்மது (ஸல்) அவர்கள் பைபிளின் சரித்திரத்தை தவறாகப் புரிந்து கொண்டு குர்ஆனில் எடுத்தெழுதியபோது ஏற்பட்ட பிழையாக இதனைக் கருதலாம் அல்லவா? கிறிஸ்தவ விமர்சனம் இவ்வாறு செல்கிறது.

சமாரியர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடும் வார்த்தை இரண்டாம் ராஜாக்கள் 17 ஆம் அத்தியாயம் 29 ஆம் வசனத்தில் இடம் பெறுகிறது.

“ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.” (II ராஜாக்கள் 17:29)ஹீப்ரு பைபிளில் இவ்வசனம் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

(Courtesy to: http://www.islamic-awareness.org/)


ஹீப்ரு பைபிளில் ‘ஷம்ரோனிம்’ என்ற வார்த்தை (அடிக்கோடிடப்பட்டது)சமாரியர் என்று தமிழிலும் samaritan என்று ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் சமாரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.

ஆனால் சமாரியர்கள் இதற்கு சற்று நிகரான உச்சரிப்பை உடைய ஆனால் முற்றிலும் வேறுபட்ட ஒரு பொருளைத் தரக்கூடிய ஒரு வார்த்தையால் தம்மை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர் என்பதை கிறிஸ்தவ உலகம் தந்திரமாக மூடி மறைத்து விட்டது!

அவர்கள் தம்மை அடையாளப்படுத்த ஷாமெரின்(Shamerin என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் தோரா என்னும் வேதத்தைப் பாதுகாப்பவர்கள் அல்லது அதைப் பற்றிப் பிடித்து வாழ்பவர்கள் என்பதாகும்.

… the Samaritans prefer to style themselves ‘Shamerim’ i.e., “the observant” – rather than ‘Shomeronim’ i.e., “the inhabitants of Samaria.” -Samaritans” in G. A. Buttrick (Ed.), The Interpreter’s Dictionary Of The Bible, Volume 4, 1962 (1996 Print), Abingdon Press, Nashville, p. 191(Courtesy to: http://www.islamic-awareness.org/)

மோசேவுக்குப் பின்னர் உருவானவர்களே சமாரியர்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் இது தொடர்பான விரிவான ஆய்வுகளும் சமாரியர்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளும் சமாரியர்களுக்கு மிகப் பழமையான வரலாறு உள்ளது என்பதைத் தெளிவு படுத்துகிறது !

தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்றும் வேதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் வாதிக்கும் ஓர் இனத்தைப் பற்றி ஹார்பர்ஸ் பைபிள் அகராதியும் (Harpers Bible Dictionary) கூறுகிறது. இவர்கள் தங்களை ஷாமெரிம் (Shamerim) என்று அழைக்கிறார்கள். வேதத்தை முறையாகப் பின்பற்றுபவர்கள் என்பது இதன் பொருளாம்.

“ஒரு மதப் பிரிவினர்கள் என்ற முறையில் சமாரியர்கள் ஒழுக்க நெறி மிக்கவர்களாகவும் தோராவைப் பற்றிப்பிடித்து வாழ்பவர்களாகவும் தங்களின் மத பாரம்பரியத்தில் அபிமானம் கொளக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். புராதன இஸ்ரவேல் கற்பித்த மதத்தை யூதர்களை விட தாங்களே உண்மையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் அவர்கள் தங்களைக் குறித்து கூறுகிறார்கள். தங்களைக் குறித்து அவர்கள் கூறுவது “ஷாமெரிம்” (தோராவைக் கடைபிடிப்பவர்கள்) என்றாகும். யூதாவின் பின்தோன்றல்கள் யூதர்கள் என்பதைப் போல புராதன கால யோசேப்பின் பின்தோன்றல்களே தாங்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்." (Harpers Bible Dictionary Page 899 – Quoted by M.M Akbar)

சமாரியர்களைக் குறித்து அவர்கள் சமரியாப் பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிட்டாலும் சமாரியர்கள் தங்களின் மூதாதையர்களைப் பற்றித் தரும் செய்திகள் இதற்கு மாற்றமாக உள்ளன.
ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தைக் குறித்து அவர்களின் எதிர் தரப்பினர் தரும் செய்திகளை விடவும் அச்சமுதயாயத்தினர் சுயமாகவே தரும் தங்களின் பூர்வீகத்தைப் பற்றிய குறிப்புகள் வலிமை மிக்கது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சமாரியர்கள் எனப்படுவோர் தங்களை மத பாரம்பர்யம் உடையவர்களாகவும், ‘தோரா’ என்ற வேதத்தைக் கடைபிடிப்பவர்களாகவும் யோயேசப்பின் பின்தோன்னறல்களே தாங்கள் என்றும் தங்களை அவர்கள் அடையாளப் படுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட் ஆதாரங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் (Encyclopaedia Britanica) சமாரியர்களைக் குறித்து குறிப்பிடுவதாவது:

The Samaritans call themselves Bene-Yisrael (“Children of Israel”), or Shamerim (“Observant Ones”), for their sole norm of religious observance is the Pentateuch (first five books of the Old Testament). Other Jews call them simply Shomronim (Samaritans); in the Talmud (rabbinical compendium of law, lore, and commentary), they are called Kutim, suggesting that they are rather descendants of Mesopotamian Cuthaeans, who settled in Samaria after the Assyrian conquest.

சமாரியர்கள் தங்களை இஸ்ரவேலின் புத்திரர்கள் என்றும் “ஷாமெரிம்” (வேதத்தை கடைபிடிப்பவர்கள்) என்றும் அழைக்கின்றனர். ஏனெனில் அவர்களுடைய மத வழிபாடுகளின் அடிப்படையாக விளங்குவது பஞ்ச ஆகமங்களாகும். பிற யூதர்கள் அவர்களை ” ஷொம்ரொனிம்” Shomronim (சமரியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்கள்) என்று அழைக்கின்றனர். தல்ம (து என்னும் யூதர்களின் வேதத்)தி ல் அவர்களைக் (kutim) கூத்திம் என்று கூறப்பட்டுள்ளது. அசீரியர் வெற்றிக்குப் பின்னர் சமாரியாவில் குடியேறிய மெசப்பட்டோமியாவைச் சேர்ந்த கூத்தியர்களின் சந்ததிகள் என்ற எண்ணத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். (”Samartian” Encyclopaedia Britanica – online edition.)

யூதர்களின் கலைக் களஞ்சியமாகிய என்சைக்ளோபீடியா ஜூதாயிகா (The Encyclopaedia Judaica) சமாரியர்களின் பூர்வீகத்தைப் பற்றிய முக்கிய குறிப்பொன்றைத் தருகிறது. தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்று வாதிடும் சமாரியர்களின் வாதத்திற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளதாக யூதர்களின் கலைக் களஞ்சியம் குறிப்பிடுவதைப் பாருங்கள் :

Until the middle of the 20th century it was customary to believe that the Samaritans originated from a mixture of the people living in Samaria and other peoples at the time of the conquest of Samaria by Assyria (722–721 BCE). The Biblical account in II Kings 17 had long been the decisive source for the formulation of historical accounts of Samaritan origins. Reconsideration of this passage, however, has led to more attention being paid to the Chronicles of the Samaritans themselves. With the publication of Chronicle II (Sefer ha-Yamim), the fullest Samaritan version of their own history became available: the chronicles, and a variety of non-Samaritan materials. According to the former, the Samaritans are the direct descendants of the Joseph tribes, Ephraim and Manasseh, and until the 17th century CE they possessed a high priesthood descending directly from Aaron through Eleazar and Phinehas. They claim to have continuously occupied their ancient territory and to have been at peace with other Israelite tribes until the time when Eli disrupted the Northern cult by moving from Shechem to Shiloh and attracting some northern Israelites to his new followers there. For the Samaritans, this was the ’schism’ par excellence.(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)

சமாரியாவில் வாழ்ந்தவர்களும் அசீரியர்கள் சமாரியாவை வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் (கி.மு722) குடியேற்றப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு கலப்பினமே சமாரியர்கள் என்பதுதான் இருபதாம நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரையிலான நம்பிக்கையாக இருந்தது. பைபிளின் இரண்டாம் ராஜாக்கள் 17 ஆம் அத்தியாயம் இப்படி ஒரு நம்பிக்கை கொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. பைபிளின் இந்த நிலைபாடு மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆய்வில் சமாரியர்களின் புராதன ஆவணங்களுக்கு தனிக் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. செபர்ஹா-யாமிம் என்ற (சமாரியர்களின்) இரண்டாம் நாளாகமம் Chronicle II (Sefer ha-Yamim) வெளியிடப்பட்டதோடு சமாரியர்களின் வரலாறு முழுமையான வடிவத்தில் கிடைக்கப் பெற்றன. அத்துடன் அவர்களல்லாத மற்றவர்களைக் குறித்த சில குறிப்புகளும் அதில் காணப்பட்டன.

இதனடிப்படையில் யோசேப்பின் குலத்தவராகிய எப்பிராயீம், மானேசா முதலானவர்களின் நேரடி வழித்தோன்றல்களே சமாரியர்கள் ஆவர். மேலும் 17 நூற்றாண்டு வரை ஆரோன் முதற்கொண்டு எலியாசர் மற்றும் ஃபினெஹாஸ் வழியாக மாபெரும் புரோகிதத்துவத்தையும் அவர்கள் உரிமை கொண்டாடினர்.

வடக்கு மகாணத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களை தன்னுடைய மத ஆச்சாரங்களின்பால் பால் ஈர்ப்பதற்காக சேகேமிலிருந்து ஷீலோஹ் என்ற இடத்தில் மாற்றிக் கொண்டு அவர்களின் கலாச்சாரத்தில் சீர்குலைவு ஏற்படுத்திய ஏலீ என்பவரின் காலம் வரை இஸ்ரவேலர்களுடன் தாங்கள் சமாதானமாக வாழ்ந்ததாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். சமாரியர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. .(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)

கிறிஸ்தவர்கள் கூறுவதைப் போன்று கி.மு 722 ல் உருவானது அல்ல சமாரியர் என்ற சமூகம், மாறாக அதற்கு முன்னரே, யோசேப்பில் இருந்தே அவர்களின் பூர்வீகம் துவங்குகிறது என்பதை பல உறுதியான சான்றுகளைக் கொண்டு நிரூபித்துள்ளோம். ஷாமெரிம் அல்லது ஷாமெரின் என்ற வார்த்தையை ‘ஷம்ரோனிம்’ என்று மாற்றம் செய்த போது சமாரியர் என்ற இனம் ஒரு பிரதேசத்துடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்டது என்பதைத் தவிர இதற்கு வேறு அடிப்படைகள் இல்லை.

அப்படிப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோசேயின் காலத்திலும் வாழ்ந்து அவர்களில் ஒருவன் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி அதை வணங்குமாறு இஸ்ரவேலர்களிடம் கூறி அவர்களை வழிகெடுத்தான் என்றும் அவனைப் பற்றி ‘ஸாமிரி’ (சமாரியன்) என்று குர்ஆன் குறிப்பிட்டால் அது சரித்திர தவறு என்று எவ்வாறு கூற முடியும்?

மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை” என்று சரித்திரத்தில் நுனிப்புல் மேய்ந்து விட்டு அல்லது சரித்திரம் என்றால் அது பைபிள் மட்டுமே என்று மனப்பால் குடித்துக் கொண்டு அல்லது அறிந்து கொண்டே உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு குர்ஆனின் மீது விமர்சனம் வைத்த கிறிஸ்தவர்கள் இனியேனும் உண்மையை அறிந்து கொள்வார்களாக. சத்திய இறைவேதத்தின் பால் தங்கள் கவனத்தை செலுத்துவார்களாக.

" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)

காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை வழிகெடுத்தது சாமிரியா? அல்லது பைபிள் கூறுவதைப் போன்று இறைதூதர் (ஆரோன் என்னும்) ஹாரூனா? என்பது குறித்து விரைவில் அடுத்த தொடரில்…

Published in: Islamkalvi

Saturday, July 11, 2009

திருக்குர்ஆனில் சரித்திர தவறா?


திருக்குர்ஆனில் சரித்திர தவறா?

"பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்"


கிலங்களின்ன இறைவனிடமிருந்து இது இறக்கப்பட்டது என்று பிரகடனம் செய்யும் ஒரே இறைநூல் திருக்குர்ஆன்! (26: 192) மானிடரும் ஜின் இனமும் ஒன்றிணைந்து முயற்சி செய்தாலும் இதற்குச் சமமான ஒரு நூலைக் கொண்டு வர இயலாது என்று அறைகூவல் விடுக்கும் ஒரே வேதம்! (2:23, 17:88) மாறுதல்களோ, முரண்பாடுகளோ தவறுகளோ அதனை நெருங்காது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்ட ஒரே வேதமும் திருக்குர்ஆன் மட்டுமே! (4:82, 15:9, 41:42)


அன்று முதல் இன்று வரை இறை மறுப்பாளர்கள் திருக்குர்ஆனை விமர்சித்து வந்த போதிலும் அவை எல்லாவற்றையும் கடந்து இன்றளவும் மேலோங்கி நிற்கும் சிகரமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இறைவனின் அறைகூவலுக்கு எதிராக திருக்குர்ஆனைப் போன்று ஒரு நூலை உருவாக்க முயன்றவர்கள் இறுதியில் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டு இதற்கு முன் சரணடைந்ததே சரித்திரமாக உள்ளது.


அன்றைய இறை மறுப்பாளர்களைப் போன்று இன்றைய காலகட்டத்திலும் மேற்கத்திய, கீழைத்தேயத்தவரும் யூத கிறிஸ்தவ விமர்சகர்களும் திருக்குர்ஆன் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் திருக்குர்ஆனில் சரித்திர தவறுகள் உள்ளன என்பதுவாகும். குறிப்பாக சில கிறிஸ்தவர்கள் இதை ஒரு பிரச்சாரமாக ஆக்கி கிறிஸ்தவத்தை வளர்துக்கொள்ள முயன்று வருகின்றனர். திருக்குர்ஆன் மீது அவர்களால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்பதுடன் அவர்களுக்கே எதிரான ஆதாரங்களாக அவை அமைந்துள்ளன என்பதை இத்தொடரில் நாம் நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்!


திருக்குர்ஆனில் பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. ஆதி பிதா எனப்படும் ஆதம் (அலை) அவர்கள் முதற் கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர்கள் மற்றும் சான்றோர்களைப் பற்றிய வரலாற்றத் தகவல்கள் திருக்குர்ஆனில் உள்ளன. இத்தகைய வரலாறுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒரு படிப்பினையாகவே அவை தேவைக்கு ஏற்றார் போல் தேவைப்பட்ட இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதேயன்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் போன்று காலக் கிரம வரிசைப் படி சம்பவங்களை வரிசைப் படுத்திச் சொல்லவில்லை. காரணம் திருக்குர்ஆன் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் புத்தகம் அல்ல. நன்மை தீமையைப் பிரித்தறிவித்து மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நல்லுபதேசமாகவும் அருளப்பட்ட வேதம்! திருக்குர்ஆனைப் பொறுத்த மட்டில் மக்கள் படிப்பினை பெறும் அளவுக்கு போதுமான வரலாற்று சம்பவங்கள் மிகத் தெளிவாகவும் முரண்பாடுகளின்றியும் குழப்பங்களின்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனில் வரலாற்றுச் செய்திகள் என்ன நோக்கத்திற்காக விவரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்தும் ஏதேனும் சில வசனங்களைக் காண்க:


"நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன" (11:120)


"நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்" (12:3)


"திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்" (40:78)



மேற்கண்ட வசனங்கள் நமக்கு தரும் செய்திகள்:


தன்னைப் போன்ற ஒரு தூதுப் பணியுடன் தனக்கு முன்னரும் இறைதூதர்கள் அனுப்பப்ட்டிருக்கின்றனர். தனக்கு ஏற்பட்டது போன்ற இன்னல்கள் அவர்களுக்கும் ஏற்பட்டது என்பதை விளக்குவதன் மூலம் இறைதூதரின் உள்ளத்தைத் திடப்படுத்தவும், இறை நம்பிக்கையாளர்கள் வரலாற்றுச் செய்திகளின் மூலம் படிப்பினையும் நல்லுபதேசமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உள்ளம் அதனால் பண்பட வேண்டும் என்ற நோக்கிலும் தான் வரலாறுகள் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.


திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள எந்த வரலாற்றுச் செய்திகள் குறித்தும் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை.


மனித சமூகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான இறைதூதர்க்ள அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அளனவரின் வரலாறும் திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. அவர்களில் சிலரது வரலாறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.



கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்:


பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.


திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தெழுகை தொழுகையிலும், மற்ற நேரங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் திருக்குர்ஆன் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே பைபிளைப் போன்று ஒரு கதை சொல்லும் பாங்கில் இருந்திருந்தால் அது மிகப் பெரிய புத்தகமாகி ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் கடினமாகி திருக்குர்ஆன் ஏட்டளவில் ஒதுங்கியிருக்கும். கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நடமாடும் குர்ஆன்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க. இது போன்று பைபிளை முழுக்க மனப்பாடமிட்டவர்கள் என்று உலகில் எத்தனை பேரைக் காட்ட முடியும்?


திருக்குர்ஆனில் ஒரே இறைதூதரைப் பற்றிய வரலாறுகள் பல அத்தியாயங்களில் தேவைக்கு ஏற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவை நினைவில் நிற்பதற்கு எளிதாகவும் இறைநம்பிக்கையை அதிகரிக்கவும் தோதுவாக இருக்கிறது.


"அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை" (39:23)




பைபிளில் இடம் பெறாத இறைதூதர்களின் வரலாறுகளும், பைபிள் குறிப்பிட்டு்ள்ள இறைதூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பைபிள் குறிப்பிடாத நிகழ்ச்சிகளும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இது எல்லாவற்றையும் அறிந்த இறைவனால் அருளப்பட்ட இறைநூல் என்பதற்கான சான்று ஆகும்.


பைபிள் என்பது தீர்க்கதரிசிகளின் வரலாற்றை பிற்கால எழுத்தர்களால் தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூற்களின் தொகுப்பு ஆகும். உதாரணத்திற்கு உபாகமம் 34 ஆம் அத்தியாயம் மோசேயின் வரலாறு பற்றிக்கூறும் போது மோவாப் என்ற தேசத்தில் அவர் இறந்ததாகவும் அவரது கல்லறை எங்குள்ளது என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மோசேக்கு இறக்கப்பட்டதாக கிறிஸ்தவர்கள் கூறும் தோராவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இவ்வத்தியாயத்தில் மோசேவின் இறப்புச் செய்தியும் அவரது கல்லறையை யாரும் அறியவில்லை என்பது குறித்தும் வந்துள்ள செய்தி இது யாராலோ எழுதப்பட்டது என்பதற்கான சான்றாக உள்ளது. இது குறித்து கிறிஸ்தவ அறிஞர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஏராளமான ஆசிரியர்களைக் கொண்டு பைபிள் தொகுக்கப்பட்டிருப்பதால் அதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துள்ளன.


என்றோ நடந்து முடிந்த சம்பவங்களைக் குறித்து அதற்கு நேரடி சாட்சியம் வகித்த ஒருவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக அது குறித்து எந்தத் தகவலையும் அறிந்திராத ஒருவர் மூலமே உலகம் அதைக் கேட்டது. அதிலும் முரண்பாடுகள் எதுவுமன்றி மிகவும் நேர்த்தியான தகவல்கள்! ஒரு கதை சொல்லும் பாங்கை விட "நீர் சொல்வீராக!" "நீர் ஓதிக் காட்டுவீராக!" நாம் விளக்கிக் காட்டுகிறோம்" என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வசன நடைகளில்! அதை உலகுக்கு அறிவித்தவரோ அகிலங்களின் இறைவனிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றது என்று கூறுகிறார்! அவ்வாறு வருவதாக அவர் கூறும் செய்திகளோ அற்புதமாகவும் நேர்த்தியாகவும், முரண்பாடுகளின்றியும், தெளிவாகவும், கேட்பவரின் உள்ளங்களை சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கின்றது. தனது நாற்பது வயது வரை அவரிலிருந்து வெளிப்படாத அற்புதங்கள் வெளிப்படுகின்றன! அரைக் குறித்து பொய்யர் என்றோ மோசடிக்காரர் என்றோ எந்த குற்றச்சாட்டும் அவரது சமூகத்தில் இல்லை. மாறாக தனது சமூகத்தில் மிகவும் நல்லவராகவும் கண்ணியம் மிக்கவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்து அவர் பொய்யுரைக்கிறார் என்று எங்ஙனம் கூற இயலும்? அவர் கூறும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதல்லவா அறிவுடைமை? இத்தகைய நடுநிலையான சிந்தனையின் மூலம் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்திகளை ஆராய்வோமானால் எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட செய்திகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.


(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)


திருக்குர்ஆனின் சரித்திரத் தவறுகள் என எந்தெந்த செய்திகளை கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ, அதே செய்திகள் கூட பைபிளை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து திருக்குர்ஆனின் தனிச்சிறப்பையும்பும் ஒரு இறைநூலுக்கே உரிய அதன் கம்பீரத்தையும் பறைசாற்றி நிற்கிறது என்பது தான் அற்புதமான செய்தியாக உள்ளது. சரித்திரத் தவறுகள் என்ற கிறிஸ்தவர்களின் மேற்கோள்களையும் அதற்கான விளக்கங்களையும்தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம். இன்ஷா அல்லாஹ்!

Monday, April 27, 2009

அன்புள்ள அம்மாவுக்கு... ஒரு முன்னாள் கிறிஸ்தவ பெண்மணியின் உருக்கமான கடிதம்!


அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.


அந்த நூல்கள் அவருள் பிரள யத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.


சென்னை டெபுடி கமிஷ்னர் காமினி யின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.


இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.
*-ஆசிரியர்.*


அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக
காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.


என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு
உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா
அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த
லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.


இப்படிக்கு..


*ரஜிதா (எ) ஹமிதா*

Thursday, April 2, 2009

பன்றிக்கறி (போலி) உமரும் காணாமல் போன பதிவும்


பைபிள் கூறும் பயங்கரவாதம் பகுதி 2 என்ற எமது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

“பன்றி மாமிசம் உண்ணக் கூடாது” என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!

பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களுக்கு பதில் சொல்லவும் அதனை மறைக்கவும் இயலாமல் விழிபிதுங்கிய போலி உமர் ஆங்கில தளத்தில் கண்ட பன்றிக்கறி கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டு புளங்காகிதம் அடைந்தார். மொழி பெயர்த்த கையோடு அதனைத் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் வெளியிட்டிருந்தார். அதற்கு சில முஸ்லிம்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். முஸ்லிம்களை விட்டு விடுவோம். சில கிறிஸ்தவர்கள் கொடுத்திருந்த கருத்துக்கள் போலி உமரின் கருத்துக்களை அப்படியே மறுப்பதாக இருந்தன. தன் கருத்தில் தடம் புரண்டு தத்தளித்த பன்றிக் கறி புகழ் போலி உமர் பன்றிக்கறி சாப்பிடலாம், தவறில்லை ஆனால் நான் சாப்பிடமாட்டேன் என்று தன்னைப் பரிசுத்தப் படுத்த முயன்று கடைசியில் இறைவன் சொன்னதற்காக பன்றிக் கறி சாப்பிடாமல் இருக்கலாம் என்று மீண்டும் குழம்ப தன் கருத்துக்கு தானே எதிர் கருத்து பதிவு செய்தார்.

குழம்பி, குழப்பி, குழப்பத்தின் உச்சகட்டத்துக்கே சென்று கடைசியில் பன்றிக் கறி கட்டுரையை தமிழ்கிறிஸ்தவ தளத்திலிருந்து நீக்கி விட்டனர்.

கிறிஸ்தவர்களே உங்கள் குழப்பத்தை உலகம் அறிந்து தெளிவு பெறட்டும். பன்றிக் கறி பதிவை மீண்டும் வெளியிடுங்கள். செய்வீர்களா?

பன்றிக் கறி பற்றி கிறிஸ்தவர்களுக்கே ஒரு சரியான தெளிவான கருத்து இல்லை. இந்த லட்சணத்தில் தான் தெளிவான இஸ்லாமின் கோட்பாடுகளை இவர்கள் விமர்சிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

Monday, March 30, 2009

ஒரு கன்னியாஸ்திரீயின் கதை!

தன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின. அதன் தலைவர்கள் புனிதர்களாகி வழிபாட்டுக்-குரியவர்கள் ஆனார்கள். இவர்கள் இயற்கைக்கு மாறாக இல்லறம் தவிர்த்து மனித சமுதாயத்தில் தம்மை உயர்ந்தவர்களாக, தனித்தவர்களாக அடையாளப்-படுத்திக் கொண்டனர். ஆனாலும், இவர்களது வாழ்வியலோ மிக உயரிய வசதிகள் உடையதாக இருக்கும். எல்லாவிதமான சத்து நிறைந்த உணவுகளையும் புசிப்பார்கள். தமக்கென தனிச் சீருடையை அணிந்து கொண்டு காட்சி தருவார்கள். அப்போதுதான் மக்களின் கவனம் இவர்கள்மீது படியும் அல்லவா? இந்தியாவில் முன்காலத்தில் உருவான பல சமுதாயங்களின் கூட்டுக்கலவையான இந்து மதத்தில் மடங்களும், சாமியார்களும் உண்டு. அதுபோலவே கிறித்துவ மதத்திலும் உலகளாவிய அளவில் திருச்சபைகளும் உள்ளன. அதன் நீட்சியாக இந்தியாவிலும் திருச்சபைகள் அமைக்கப்பட்டு தேவாலயம் அதனையொட்டிய பள்ளிகளிலும், மருத்துவமனை ஆகியவற்றை நிருவகிக்க பாதிரியார்-கள் பொறுப்பேற்றிருப்பார்கள்.

கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது என்பதும் இல்லறம் துறந்து இறைப்-பணிஆற்றவேண்டும் என்பது மதக்-கட்டளை. அதேபோல வேத ஊழியம் செய்யவரும் பெண்-களும் கன்னியாஸ்திரீகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் மேற்சொன்ன புலனடக்கவிதிகள் பொருந்தும். ஆனால், இவ்வாறு இயற்கை உணர்வு-களுக்கு எதிராக மனிதர்-களால் இருக்க முடியுமா என்பதை பாதிரியார்களாக இருந்து பகுத்தறிவாளர்-களாக மாறியவர்களில் தொடங்கி, உலகியல் கற்ற, உடலியல் கற்ற அனைவரும் கேள்வி எழுப்புவதுண்டு.

மனித உடலில் ஏற்படும் வேதி-மாற்றங்-களால் உடல் இச்சை என்பது தவிர்க்க முடியாதது; மாற்றுப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதனைத் தவிர்ப்பது இயலாதது. ஆனால், இதனைக் கடந்து மனதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து இறைப்பணி செய்வோர் இவர்கள் என்றே மதபீடங்கள் மார்தட்டுகின்றன. என்றாலும் அவ்வப்போது மதப்பீடங்களில் திருச்சபை-களில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து மதக்கட்டுகளை அறுத்தெறிந்து வருகின்றன.

இப்படித்தான் அண்மையில், கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரீ ஆமென் - ஒரு கன்னியாஸ்-திரியின் ஆத்ம கதை என்ற நூல் பல உண்மைகளை உரைத்துவிட்டது. ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூலை எழுதியவர் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி (வயது 53). இவரது இயற்பெயர் மியாமி ரபேல். தனது 25ஆம் வயதில் காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்னல் (CMC) என்னும் திருச்சபையில் இணைத்துக் கொண்ட ஜெஸ்மி, இங்கிலீஷ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளர், முதல்வர் எனப் பணியாற்றிய இவர் தமது 30 ஆண்டுகால கன்னியாஸ்திரீ வாழ்வில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளார்.

புனித மடங்கள் எனச் சொல்லப்படும் மதச்சபைக்குள் நிகழ்ந்து வரும் பாலியல் எல்லை மீறல்களை விவரித்துள்ளார் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி. கன்னியாஸ்திரீ-களிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. கன்னியாஸ்திரீகள் பாதிரியார்-களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறும் ஜெஸ்மி, பாதிரியார்கள் தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்புணர்ச்சியையும் கூறுகிறார்.

நான் பெங்களூருக்குச் சென்றபோது வரவேற்க வந்த பாதிரியார் என்னை இறுக அணைத்து அதிர்ச்சி கொடுத்தார். அங்கு லால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மரங்-களின் அடியில் அந்தரங்கமான நிலையில் அமர்ந்திருந்த ஜோடிகளைக் காண்பித்தார். பின்னர் உடல் ரீதியான காதலின் தேவை குறித்தும், பெண்களுடன் முறைகேடான உறவு வைத்-திருந்த பாதிரியார்கள் மற்றும் பிஷப்பு-களின் கதைகளையும் சொன்னார். பிறகு தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கட்டிலில் அமரவைத்து என்னை இறுக அணைத்தார். ஓர் ஆணை முழுமையாய் பார்த்திருக்கிறாயா எனக்கேட்டு விட்டு ஆடைகளைத் துறந்தார் இதைத் தொடர்ந்து ஜெஸ்மி எழுதியுள்ள சில வரிகளை நாம் இங்கு எழுதமுடியாது.

கன்னியாஸ்திரீகளின் மடத்தில் பல கன்னியாஸ்திரீகள் ஜோடியாகவே இருப்பார்-கள்; வேறு சிலரிடையே பாலியல் நடவடிக்-கைகள் இருந்தது என்று எழுதியுள்ள ஜெஸ்மி, சிஸ்டர் லிமி என் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கினார். எனக்கு காதல் கடிதங்கள் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதவில்லை. சிஸ்டர் லிமி எனக்கு எதிராகத் திரும்பவே அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வேறு வழியில்லாமல் அவரின் பாலியல் இச்சை-களுக்கு நான் சிலகாலம் பலியாக நேர்ந்தது என்று எழுதியுள்ளார்.

புனிதமானவர்கள் என்றும் இறைப்-பணியாளர்கள் எனவும் கூறப்படும் கிறித்துவ திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்-திரீகள் மீதான ஜெஸ்மியின் இந்தக் குற்றச்-சாட்டுகளைக் கண்டு கேரள கிறித்துவ அமைப்பு-கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. ஜெஸ்மியின் குற்றச்சாட்டுகளுக்கு சி.எம்.சி. அதிகாரபூர்வமான எந்தப் பதிலையும் இதுவரை கூறாமல் மவுனம் காக்கிறது. ஆனால் அதன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பால் தேலக்காட், ஜெஸ்மி எழுப்பியுள்ள பிரச்சினைகளை புறக்கணித்து-விட முடியாது. சர்ச்சும், சி.எம்.சியும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளிடையேயான பாலியல் உறவுகள் உண்மையாக இருக்கலாம்; திருச்சபைகளில் ஆங்காங்கே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தல் என்பது உலகியல் இயல்பு. இதற்கு எதிராக புனிதத் தன்மையை கற்பித்து மதங்கள் செயல்படும்போது அதன்மீதான இயற்கையின் தாக்குதலே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாக எழுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை வேண்டும் என்று 400 பாதிரியார்கள் போப் ஆண்டவருக்கு விண்ணப்பம் போட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.
அவர்கள் வலியுறுத்தும் கொள்கைக்கும் அவர்-களது நடத்தைக்கும் இடையே மிகப்-பெரிய இடைவெளி நிலவுகிறது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு வைத்திருந்-தார்கள் அல்லது மோசமான ஊழலில் ஈடுபட்டிருந்தனர் - இப்படிக் கூறுவது நாம் அல்ல; - கன்னியாஸ்திரி ஜெஸ்மி. நாம் என்ன சொல்வது? ஆமென் என்று சொல்லலாம்; ஆமென் என்பதற்கு எனவே அது இருக்கிறது என்று பொருளாம்.

- மணிமகன்(படம் : இந்தியா டுடே]

மணிமகன்(படம் : இந்தியா டுடே]
நன்றி;உண்மை இதழ்.
மேலும் இதையும் படிக்கவும்.
Courtesy: குங்குமம் இதழ்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (7)


குழந்தைக் கொலைகள் பைபிளில்!

பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம் நிச்சயமாக கடவுளின் உபதேசமாக இருக்க முடியாது. இனவெறி கொண்ட புரோகிதர்களின் கைச்சரக்காகவே இதனைக் கருத முடியும்.

மோசே என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கட்டளையிட்டதாக பைபிளில் இடம் பெற்றுள்ள வன்முறைகளை இத்தொடரில் காண்போம்.

மிதியான் என்ற நகரத்து மக்களைப் பழிவாங்குமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினாராம். அதைத் தொடர்ந்து நடை பெற்ற நடவடிக்கைகளாக பைபிள் கூறுவதாவது:


எண்ணாகமம்: அதிகாரம்: 31

பன்னிரண்டாயிரம் படைவீரர்களைத் திரட்டிக் கொண்டு மிதியான் மீது யுத்தம் நடக்கிறது. (31:5)

அப்படை வீரர்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொலை செய்தார்கள் (31:7)

பெண்களையும் குழந்தைகளையும் சிறை பிடித்தார்கள்; ஆடு மாடுகளையும் மற்ற மிருகங்களையும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையிட்டார்கள் (31:9)

அவர்களின் ஊர்களையும் குடியிருப்புகளையும் தீக்கிரையாக்கினார்கள் (31:10)

இவற்றைச் செய்த பின்னரும் மோசே க்கு படைவீரர்கள் மேல் திருப்தி ஏற்படவில்லையாம்! ஏன் தெரியுமா? மேற் கொண்டு படியுங்கள்:

(மோசே)அவர்களை நோக்கி, ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே (31:16)

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு மாறு செய்யத் தூண்டியவர்கள் பெண்கள்(?!) அதனால் இது சரிதான் என்று கிறிஸ்தர்வகள் ஒருவேளை இதற்கு நியாயம் கூறலாம். அட! குழந்தைகள் என்ன பாவம் செய்தன? பின் வரும் கட்டளையைப் பாருங்கள்:

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். (31:17)

உடலுறவில் ஈடுபட்டு கன்னி கழிந்த பெண்கள் அனைவரையும் கொன்று விட்டு கன்னி கழியாத பெண்களை (குழந்தைகளையும்) உயிரோடு விட்டு வைக்க வேண்டுமாம். எதற்குத் தெரியுமா?

ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். (31:18)

“உங்களுக்காக” அதாவது நீங்கள் அவர்களை அனுபவிப்பதற்காக

போரில் அடிமைகளாக்கப் பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதித்ததைக் கொச்சைப் படுத்தி விமர்சிக்கும் கிறிஸ்தவர்களே! இதோ பச்சிளம் பெண் குழந்தைகளைக் கூட அனுபவிப்பதற்கான லைசன்சை பைபிள் வழங்கியுள்ளதே?! மல்லாந்து படுத்துக் கொண்டு நீங்கள் காரி உமிழ்ந்தால் அது உங்களின் முகத்துக்கே திரும்பி வரும் என்பதை அறியாமல் இருந்து விட்டீர்களே?

இவ்வாறு கர்த்தரின் கட்டளையால்(?) படைவீரர்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்ட (கிறிஸ்தவர்களின் பாணியில் கற்பழிக்கப்பட்ட) பெண்கள் எத்தனை பேர் தெரியுமா? பைபிளே சொல்லட்டும்

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். (31:35)


முடிவுரை:

அநியாயமாக மனித உயிர்கள் பறிக்கப்படுவது பயங்கரவாதம் ஆகும். இறைவனிடத்தில் இதற்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.


அநியாயமாக ஒரு உயிரைக் கொல்பவன் மனித சமூகம் முழுவதையும் கொலை செய்ததற்குச் சமமாவான் என்கிறது திருக்குர்ஆன் (5:32)

தாம் செய்த அக்கிரமச் செயல்களை நியாயப் படுத்த இனவெறி கொண்ட புரோகிதர்கள் சேர்த்த கைச்சரக்குகளே பைபிளில் நியாயம் கற்பிக்கப்படும் பயங்கரவாதக் கருத்துக்கள். இதற்கு கடவுளின் அங்கீகாரம் ஒருபோதும் இருக்க முடியாது. இவ்வாறிருக்க பச்சிளம் குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்யவும் கொள்ளையிடவும் அழிச்சாட்டியம் செய்யவும் ஆணையிடும் உபதேசங்களை எங்ஙனம் இறைநூல் என்று கூற இயலும்? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

முற்றும்