Pages

Subscribe:

Saturday, May 5, 2012

கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!

உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக் கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.  பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம் மட்டும் தான் உண்மை மதமா?  உலகில் ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின்  வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை?

மேற்கண்ட கேள்விகள் பொதுவாக கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவ மத்திலிருந்து இஸ்லாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் சிலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு கிறிஸ்தவர் பதிவு செய்த கேள்வியும் ஆய்வு மற்றும் மூல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான விரிவான பதிலையும் கீழே கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்களுக்கு இதிலிருந்து தீர்வு கிடைக்கலாம்.




கிறிஸ்தவர் ஒருவரின் கேள்வி:

//குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை பின்பற்றிய சீடர்களுக்கு கூட உண்மையை சொல்லாமல் அவரை எடுத்துக்கொண்ட இறைவனின் பொறுப்பற்ற செயலா?//

விளக்கம்:

கிறிஸ்தவம் என்ற மதத்தை மனிதர்கள் உருவாக்க இறைவன் காரணமானவனா? என்பதை ஆராயும் முன் இறைவனைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் ஓர் அடிப்படையை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

பசியும் தாகமும், துன்பமும் வேதனையும் உடையவனாக, அழுபவனாக, அபயம் தேடுபவனாக, முன்கோபக்காரனாக, மனிதர்களிடம் மல்லுக்கு நிற்பவனாக, தன் அடிமையைக் காணாமல் தேடி அலைபவனாக, தான் செய்த காரியத்தைக் குறித்து வருத்தம் கொள்பவனாக இப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படக் கூடிய எல்லா பலவீனங்களையும் கொண்டவனாக கிறிஸ்தவம் இறைவனை நமக்கு அறிமுகம் செய்கின்றது!

கேள்வி கேட்ட அந்த நண்பர் ஒருவேளை கடவுளைப் பற்றிய இத்தகைய தவறான மதிப்பீடுகளின் மேல் நின்று கொண்டு இறைவனின் பொறுப்பற்ற செயல்என்ற முறையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் போலும்! எனவே இறைவனின் உயரிய பண்புகள் எத்தகையது என்பதை முதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் கூறும் இறைவனின் உயரிய பண்புகள்!

அல்லாஹ் என்பது சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் தன்னிகரற்ற ஓர் அரபுச் சொல்.

அல்லாஹ், நுண்ணறிவும் பரிபூரண ஞானமும் மிக்கவன்! அவனை யாரும் மிகைத்து விட முடியாது! எல்லாப் பொருட்களும் அவனது ஆற்றலுக்குட்பட்டது! நமது சிந்தனையும் ஆற்றலும் அல்லாஹ் வழங்கியதாகும்! நமது அறிவு சொற்பமானது! வரம்புகளுக்கு உட்பட்டது! அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அவனது நாட்டத்தையும் செயல்பாடுகளையும் குறித்து மனிதனால் கேள்வி எழுப்ப இயலாது!

இறைவன் ஏன் அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான் என்று கேள்வி எழுப்புவது அறிவுடைமை ஆகாது. மாறாக ஏன் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது? என்பதை சிந்தித்து இறைவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதே அறிவுடைமை. ஏன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கிறது? ஏன் சிலரை மட்டும் கடுமையான நோய் தாக்குகிறது? ஏன் சிலர் ஊனமாகப் பிறக்கின்றனர்? ஏன் இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு ஏற்படுகிறது? இவை எல்லாம் அந்த வல்லமை மிக்க இறைவனின் ஆற்றலையும் மனிதனது இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.

ஏழைக்கு அவனது ஏழ்மையும் நோயாளிக்கு அவனது நோயும் ஊனமுற்றோனுக்கு அவனது ஊனமும் சோதனைகளாகும். அது போன்றே சிலரைச் செல்வந்தர்களாகவும், உடல் நலம், உடல் பலம் மிக்கவர்களாகவும் ஆக்கி அவர்களையும் சோதிக்கிறான். இறைவனின் இந்த விதியைப் பொருந்தி கொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களே நல்லடியார்கள். இவ்வுலகத்தின் நியதியை இவ்வாறு இறைவன் ஆக்கியுள்ளான்.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, மனிதனுக்கேற்ற நேர்வழியை அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான். அதைத் தேர்ந்தெடுக்க அல்லது நிராகரிக்க உள்ள சுதந்திரத்தையும் மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்துடன் யார் நிராகரிக்கின்றார்களோ அத்தகையோருக்கு கடுமையான தண்டனையைக் குறித்தும் எச்சரிக்கிறான்.

இன்னும் நீர் கூறுவீராக: இந்த சத்திய(வேத)ம் உங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்! நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம் அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் முறையீடு நிறைவேற்றப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும் “(18 அல் கஹ்ஃபு – 29)

அல்லாஹ் நாடியிருந்தால் மக்கள் அனைவரையும் ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்களா ஆக்கிவிடலாமே? என்ற கேள்வியும் அடிப்படையற்றதாகும். இதுவும் அல்லாஹ்வின் வல்லமையை நோக்கி பலவீனமான மனித சிந்தனையின் கேள்வியாகும். இதற்கு அல்லாஹ்வே விடையளித்து விட்டான்.

அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான், எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களை அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு) செய்திருக்கிறான் (5 அல் மாயிதா: 48)

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் எனினும் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேற்றுமை கொண்டார்கள் (2 அல் பகறா 253)

உம்முடைய இறைவன் நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள் (11 ஹூது 118)

கருத்து வேறுபடுவது மனிதனின் இயல்பு. இந்த இயல்பிலிருந்தே நல்லவர்களையும் தீயவர்களையும் சோதித்து நல்லவர்களுக்கு நற்கூலியும் தீயவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது என்பது இறைவன் ஏற்புடுத்திய விதி என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

இந்நிலையிலேயே இறைவழியிலிருந்து பிறழ்ந்து உருவான மனித மதங்களைக் குறித்தும் நாம் ஆராய வேண்டும்.

மதங்களும் மனிதர்களும்

மனித சமூகத்தின் தொடக்க கால கட்டத்தில் ஒரே இறைவனை மட்டுமே மக்கள் வணங்கி வழிபட்டு வந்தனர், பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர் என்பது குர்ஆன் கூறும் செய்தியாகும். (2:213)

நூஹ் நபி (நோவா தீர்க்கதரிசி) அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் மக்கள் வணங்கி வந்த வத்து, சுவாஉ, யஃகூஃத், யஊக், நஸ்ரு ஆகிய ஐந்து சிலைகளும் முன்னர் வாழ்ந்த நல்லடியார்களின் நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்டவை! அவர்களின் பின்தோன்றல்களால் வணக்கத்துக்குரிய சிலைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன! என்ற ஆதாரமும் ஏக இறைவழிபாட்டிலிருந்து பிறழ்ந்து மதங்கள் பரிணமித்ததின் அடிப்படை வரலாற்றை எடுத்தியம்புகிறது.

ஒவ்வொரு இறைதூதர்களுக்குப் பின்னரும் அந்த இறைதூதர்களைப் பின்பற்றியவர்களின் பின்தோன்றல்களிலிருந்தே வழிகேடு உருவாகிறது என்ற அடிப்படைதான் பிற்காலத்திலும் இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது. இறைவனால் வழங்கப்பட்ட இறைநூல்களில் புரோகிதர்கள் நடத்திய கையூடல்களும் இதில் அடங்கும்.

முந்தைய வேதநூல்கள் ஏன் பாதுகாக்கப் படவில்லை? என்ற கிறிஸ்தவர்களின் கேள்விக்கும் இதில் பதில் உள்ளன. முந்தைய வேதநூல்களுக்கு பாதுகாக்கும் உத்தரவாத்ததை இறைவன் வழங்கவில்லை. இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட திருக்குர்ஆன் முந்தைய வேதங்களைப் பாதுகாப்பதாகவும் முந்தைய வேதங்களின் செய்திகளை உண்மைப் படுத்துவதாகவும் இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நடைமுறைச் சான்று பைபிளும் அதில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கோட்பாடுகளும்!

கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது?

கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற பெயருடன் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு மதம்! இயேசுவோ அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளோ இப்படி ஒரு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறவில்லை. மாறாக அவர்கள் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தையே பிரச்சாரம் செய்தனர். இஸ்லாம் என்றால் சமாதானம்! இந்த சமாதானத்தின் உடன்படிக்கை குறித்தே தீர்க்கதரிசிகள் உபதேசித்ததாகவும் அந்த சமாதானத்தையே இயேசு போதித்ததாகவும் பைபிள் கூறுகிறது! (பார்க்க: எண் 25:12, ஏசாயா 26:12, 32:17, லூக்கா 1:79, யோவான் 14:27)

இயேசுவுக்கு முன்னர் கிறிஸ்தவம் என்ற மதம் இல்லை எனில் அது யாரால் உருவாக்கப்பட்டது?

இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர் பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர். (அப்போஸ்தலர் 9: 1-9) கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது! கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும், தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கு அவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்! (உரோமையர் 3:7, 9:1) பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!

இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடும் ஒப்புக்கொள்கிறது!

அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். (திருத்தூதர் பணிகள் 11 : 26)

ஆதியில் அறியப்படாத ஆதிபாவம்?!

இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை ஆதி பாவ சித்தாந்தம் ஆகும். ஆதாம் செய்த பாவம் தலை முறை தலை முறையாக மனித சமுதாயத்தைப் பின் தொடர்கிறது என்றும் அந்த பாவத்தை நீக்கவே கடவுள் இயேசுவாகப் பிறந்து வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் அதனை நீக்கினார், எனவே இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இரட்சிப்பு பெறுவர் என்பது இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கை ஆகும்.

மனிதனின் நிரந்தர மீட்புக்கு, நித்திய ஜீவனுக்கு வழிவகை செய்வது இயேசுவின் சிலுவை மரணம் என்றால் இது மறைக்கப்பட வேண்டிய ஒரு செய்தி அல்ல. மனித சமூகத்தின் இரட்சிப்புக்கான அடிப்படை மார்க்கம் இதுவென்றால் இதனை இறைவன் மறைத்திருக்க மாட்டான். அப்படியிருக்க இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிளின் பழய ஏற்பாட்டில் ஒரு செய்தியும் இல்லையே? இறைவன் கூறுவதாக உள்ள உபதேசங்களிலாகட்டும் தீர்க்கதரிசிகளின் மொழிகளாகட்டும், மனித சமூகம் தவிர்ந்திருக்க வேண்டிய தீமைகளைப் பற்றியும் அவர்களின் நடை முறை வாழ்க்கையின் சட்டதிட்டங்களைப் பற்றியும் கூறும் எந்த இடத்திலும் மனித சமூகத்தின் ஈடேற்றத்திற்கான வழி என்று வாதிக்கப்படும் சிலுவை மரணம் குறித்த எந்த குறிப்பும் இல்லை.

மாறாக சிலுவை மரணத்திற்கு எது அடிப்படையாகக் கூறப்படுகிறதோ அந்த ஆதிபாவம் என்னும் சித்தாந்தத்துக்கு எதிரான செய்திகளே பைபிளில் பார்க்க முடிகிறது.

ஆதிபாவத்தை மறுக்கும் பைபிள்!

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும் (உபாகமம் : 24:16)

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்” (எசேக்கியேல் 18:20)

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும் (எரேமியா 31:29,30)

திராட்சைக் காய்களை பிதாக்கள் தின்றால் பிள்ளைகளின் பல் எப்படிக் கூசாதோ அது போன்றுதான் பிதாக்களின் பாவம் பிள்ளைகளைச் சேராது என்று அழகிய உதாரணத்துடன் பைபிளின் பழய ஏற்பாடு விளக்குகிறது.

புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம். இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தைப் பற்றி இயேசு எங்காவது கூறியிருக்கிறாரா? இயேசுவின் உபதேசங்களாக பைபிளில் காணக்கிடைக்கும் வசனங்களில் ஆதி பாவத்தைக் குறித்து இயேசு ஒன்றும் கூறவில்லை. அப்படி ஒரு சித்தாந்தத்தையே அவர் அறிந்திருக்கவில்லை என்பதை அவரின் உபதேசங்களும் விளக்கிக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு அவரின் உபதேசங்களாக பைபிள் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்(மத்தேயு 18: 1-4) இன்னும் (மார்கு 10: 13-16)

மனம் திரும்பி பிள்ளைகளைப் போல ஆகிவிடுங்கள் என்பது இயேசுவின் உபதேசம். மனம் திரும்புங்கள் என்றால் பாவங்களிலிருந்து மீண்டு மன்னிப்புக் கோருங்கள், அதன் மூலம் பிள்ளைகளைப் போன்று பாவமற்றவர்களாக ஆகி விடுங்கள் என்பதுதானே பொருள்? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆதாம் செய்த பாவத்தை சுமந்து கொண்டே பிறக்கின்றன என்ற கிறிஸ்தவ சித்தாந்தத்தை இயேசுவின் இந்த உபதேசம் மறுப்பதாக இருக்கிறதல்லவா? பின்னாளில் உருவான கிறிஸ்தவம் என்ற சித்தாந்தத்திற்கும் இயேசுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனபதை இது விளக்கிக் காட்டவில்லையா?

சிலுவை மரணம்?

இயேசுவின் சிலுவை மரணம் குறித்த நம்பிக்கை நூற்றாண்டுகளாக இருந்து வந்தது எனவும் முஹம்மத் (ஸல்) வந்த பின்னரே அது மறுத்துக் கூறப்பட்டது என்பதாகவும் கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் உண்மையிருக்கிறதா? என்பதையும் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

கிறிஸ்தவ உலகம் முன்வைக்கும் இயேசுவின் வரலாறு அவர் பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் எழுதப்பட்டது அல்ல. அவரது காலத்துக்குப் பின்னர் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படையில் சுவிசேஷத்தின் எழுத்தர்களால் எழுதப்பட்ட கோர்வை ஆகும்.

சிலுவையில் அறையப்பட்டவர் இயேசுவின் தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்டார் என்று குர்ஆன் கூறுகின்றது! சுவிசேஷத்தின் எழுத்தாளர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உடன் இருக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டவரை இயேசுவாக்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று எழுதியிருக்கலாம் அல்லவா? ஆம்! அப்படி இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களே பைபிளில் காணப்படுகிறது!

இயேசுவுக்குப் பின்னர் சுவிசேஷ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாற்றில் சிலுவை மரணம் குறித்த பரஸ்பரம் முரண்பட்ட செய்திகளும், இயேசு தேவ தூதர்களால் முன்றாம் வானத்துக்கு உயர்த்தப்பட்டார், அவரைக் காட்டிக் கொடுக்க முற்பட்ட யூதாஸ் அவரின் தோற்றத்துக்கு ஒப்பாக்ககப்பட்டு அவனே பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டான் என்ற இயேசுவின் நேரடிச் சீடராக விளங்கிய பர்னபாஸ் என்பவரின் ஏடு தரும் செய்திகளும் இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை, அவருக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான், அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான் என்ற குர்ஆனின் செய்தியை உண்மைப் படுத்துகிறது!

அடுத்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை பைபிளின் துணை கொண்டே ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. சிலுவை மரணத்திலிருந்து இயேசு அபயம் தேடினார்!

அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார் (யோவான்: 11:53,54)

சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின், இயேசு அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பார். மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்திருக்கமாட்டார். இயேசுவின் இந்த செயல்பாடாக பைபிள் குறிப்பிட்டுக் காட்டும் செய்தி மனிதர்களின் பாவமீட்சிக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்ற சித்தாந்தத்திற்கு முரணாக உள்ளதல்லவா?

2. மரணத்தை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ள இயேசுவின் கட்டளை

அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் (லூக்கா: 22:36)

அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்” (லூக்கா: 22:36)

சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின் தன்னை கொலை செய்யத் தேடியவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாளை எடுத்து வாருங்கள் என்று இயேசு கூற வேண்டிய அவசியம் இல்லையே? சிலுவை மரணம் பாவமீட்சிக்கான வழியல்ல, அதனை அவர் விரும்பியிருக்கவும் இல்லை என்பதைத்தானே இதுவும் வெளிப்படுத்துகிறது?

3. இயேசுவின் மனமுருகிய வேண்டுதல்!

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார் (மத்தேயு 26:38)

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44)

மிகுந்த கவலைப் பட்டு இயேசு இறைவனிடம் வேண்டியதும் அவர் சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பதையல்லவா காட்டுகிறது?! அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்! சிலுவை மரணம் தான் இரட்சிப்புக்கான வழி என்றால் அத்தகைய மரணம் என்னும் பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே?

4. சிலுவை மரணம் சாபத்திற்குரியது!

மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (உபாகமம் 21:23) என்று பைபிள் கூறுகிறது. கடவுளின் மிகுந்த நேசத்துக்குரியவராகிய இயேசு சிலுவையில் தூக்கிக் கொல்லப்பட்டார் என்பது பைபிளின் இந்த கோட்பாட்டுக்கே முரணானதல்லவா?

5. இயேசுவின் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது!

சிலுவை மரணம் என்ற பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்ற வேண்டும் என்ற இயேசுவின் வேண்டுதலை பைபிள் வசனங்களுடன் விளக்கினோம். இந்த வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது தான் பைபிளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? (மத்தேயு 7:7-10)

தெளிவாக விளங்குகிறதல்லவா? கேட்பவனுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்பத்தைக் கேட்கும் மகனுக்கு கல்லையும் மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பையும் எவரும் கொடுக்காதது போல தன்னை சிலுவை மரணத்திலிருந்து விடுவிக்கும் படி மனமுருகி வேண்டிய தன் நேசத்துக்குரியவரின் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொள்ளாமலிருந்திருப்பாரா? நிச்சயம் இருந்திருக்கமாட்டார்!

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16) என்ற வசனத்தின் அடிப்படையிலும் நீதிமான் ஆகிய இயேசுவின் வேண்டுதல் ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.

நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22) என்ற மார்த்தாளின் கூற்றும் இயேசுவின் பிரார்த்தனை ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே விளக்குகிறது. இன்னும் தெளிவாக அவரின் வேண்டுதல் ஏற்கப்பட்டது என பினவசனம் கூறுவதைப் பாருங்கள்

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சிலுவை மரணத்திலிருந்து தன்னை காக்கும்படி இயேசு வேண்டிக் கொண்டார் என்றும் அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் பைபிள் கூறும் போது அதே பைபிளில் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற செய்தி யும் இடம்பெறுகிறது! காரணம் வரலாற்றை எழுதிய பிற்கால எழுத்தர்கள் அவரது சரிதையுடன் சிலுவையில் அவர் மரித்தார் என்று அவர்களுக்கு மத்தியில் நிலவியிருந்த ஒரு குழப்பமான கருத்தையும் சேர்த்து எழுதினர் என்றே விளங்க முடிகிறது. சிலுவை மரணம் பற்றிக் கூறுகையில் சுவிசேஷ எழுத்தாளர்கள் தரும் முரண்பட்ட செய்திகள் இதில் குழப்பம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

6. சிலுவை மரணம் குறித்த செய்தியில் முரண்பாடுகள்!

சிலுவை மரணம் சம்மந்தமாக பல்வேறு எழுத்தர்களின் முரண்பட்ட கூற்றுக்களும் இதைப் பற்றி அவர்கள் யூகத்திலும் சந்தேகத்திலும் உள்ளனர் என்ற குர்ஆனின் கூற்றையே வலுப்படுத்துகிறது.

சிலுவையில் அறைவதற்காக இயேசுவை யூதாஸ் முத்தம் செய்து காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயுவும் லுக்காவும் (மத் 26: 47-50, லூக் 22) கூறும்போது யோவான் அதற்கு மாற்றமாக இயேசு தன்னைத் தானே காட்டிக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (18:3-8)

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு சென்றார்கள் என்று மத்தேயு (26:57) குறிப்பிடும்போது அதந்கு மாறாக யோவான் (18:13) காய்பாவின் மாமனாகிய அன்னா என்பவரிடத்தில் கொண்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக இயேசுவைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் செய்திகளிலும் (மத் 26: 47-50, லூக் 22 – யோவான் (18:3-8) அவரைக் கொண்டு சென்றது யாரிடத்தில் என்பதிலும் (மத்தேயு 26:57, யோவான் 18:13) சிலுவையைச் சுமந்தது யார்? என்பதிலும் (யோவான் 19:17 – மத்தேயு 27:32) இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களைப் பற்றிய செய்தியிலும் (லூக்கா 23:42 – மத்தேயு 27:44) தெளிவான முரண்பாடுகள் காணப்படுகின்றன!

இயேசுவின் இறுதிக் கால நிகழ்வுகளைக் குறித்து இயேசுவுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சுவிசேஷகர்கள் எழுதி வைத்ததில் பல முரண்பாடுகள் காணும் நிலையில் இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியை முற்றிலும் உண்மைப்படுத்துகிறது!

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!

இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப்ப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.

படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”

(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)

சிலுவை மரணம்? குழப்பத்தை நீக்கிய குர்ஆன்!

தன்னுடைய அடியாருக்கு இழிவான சிலுவை மரணம் நிகழக் கூடாது என்பது இறைவனின் நாட்டமாக இருந்தது! எனவே அவரை உயர்த்த நாடினான்! அவருக்கு இன்னொருவன் ஒப்பாக்கப்பட்டான். இந்த உண்மைச் செய்தி இயேசுவின் சீடர்களுக்கு அறிந்திருந்தாலும் பொது மக்கள் இதனை அறியாமல் இருந்தனர். பின்னர் வந்த சுவிசேஷத்தின் எழுத்தர்கள் அவர் சிலுவையில் மரித்துவிட்டதாக எழுதி வைத்தனர். இறைவனைப் பொறுத்த வரை வஹீ என்னும் இறை செய்தி மூலமே இந்த உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனது நியதி! அதற்காக ஓர் இறைதூதர் வரவேண்டும். இதோ மக்காவில் அகில உலக மக்களுக்கு இறுதி இறைதூதராக அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் இச்செய்தியைச் சொல்லிவிட்டான்.

14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இன்றும் உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுக்கும் குர்ஆனின் செய்தி இதோ!

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ஈஸா மஸீஹைகொன்று விட்டோம்என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)

சுருங்கச் சொன்னால் இயேசுவின் சிலுவை மரணம் என்பது கிறிஸ்தவர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கவில்லை. அவர்களுக்குள் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த ஒரு குழப்பத்தை குர்ஆன் நீக்கி தெளிவுபடுத்தியது என்பதே உண்மை! தன்னுடைய இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட இறுதி வேதம் குர்ஆனில் அதைத் தெளிவு படுத்திவிட்டான்! அளவற்ற அருளாளன் ஆகிய அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணை இது! உறுதியான சான்றுகள் வந்த பின்னரும் குழப்பத்தைத் தேடிச் செல்வது தம்மைத் தாமே ஏமாற்றத்தில் ஆழ்த்திக் கொள்வதைத் தவிர வேறில்லை! கிறிஸ்தவ உலகம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

                                                                     ஆக்கம் : அபூ அப்திர் ரஹ்மான்

0 comments: