Pages

Subscribe:

Tuesday, December 15, 2009

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi

இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய 'ஆரோன்' அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இறைதூதர்கள் எனப்படுவோர் மனித சமுதாயத்தை நல்வழியின் பால் அழைப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்ட்ட சத்திய சீலர்கள். மக்களை நல்வழிப்படுத்த எல்லா வகையிலும் பிறருக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். அறவழியில் தமக்கு ஏற்படும் இன்னல்களை அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மகான்களையே இறைவன் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுபதேசங்களை உள்ளடக்கிய வேதங்களையும் வழங்குகிறான்.

இந்த அடிப்படையைத் தான் திருக்குர்ஆனும் பைபிளும் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
நோவா என்னும் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது:
"நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது." (ஆதி-6:8)
"தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்." (ஆதி-6:9)

நபிமார்கள் என்ற தீர்க்கதரிசிகளைக் குறித்து குர்ஆன் இப்படிக் குறிப்பிடுகிறது:

"நிச்சயமாக (தூதர்களாகிய) அவர்கள் நன்மைகளில் விரைந்து செல்பவர்களாகவும், (நம் அருளில்) ஆசை கொண்டும், (நம் தண்டனையை) பயந்தும், நம்மை (பிரார்த்தித்து) அழைப்பவர்களாகவும் இருந்தனர் - இன்னும், நம்மிடம் உள்ளச்சம் கொண்டோராகவும் இருந்தனர்" (21 அல் அன்பியா 90)

இறை வழியில் மக்களை நடத்துபவர்கள் மக்களில் மிகச் சிறந்தவர்களாக, சாதாரண மக்கள் செய்யும் தீய செயல்களில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். இது தான் நீதிக்கு மிக நெருக்கமானது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் காவல் துறை ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் நற்குணம், நற்சான்று முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுண்டு. சட்டத்தை நிலை நாட்டக் கூடியவர்கள் சட்டத்தை மீறக்கூடாது என்ற அடிப்படையில். திருட்டு, கொள்ளை கொலை வழக்கில் ஈடுபட்டவனை அரசாங்கம் காவல் துறைக்கு தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக பிடித்து தண்டனை வழங்கும். உலகியல் நியதி இவ்வாறிருக்க, நீதிமான்களுக் கெல்லாம் நீதிமான் ஆகிய வல்ல இறைவன் மக்களை நீதியின் பால் வழி நடத்த வேண்டிய தீர்க்கதரிசிகளை பாவிகளிலிருந்து தேர்ந்தெடுக்க மாட்டான். பாவம் செய்த பின்னரும் அப்பதவியில் நீடிக்க விட மாட்டான். இறைவனின் நியதி இயற்கையானதாகும். இந்த அடிப்படையில் இஸ்ரவேலர்களின் காளைக் கன்றின் சிலை வழிபாடு குறித்து ஆராய்வோம்.

நன்மைகளை அழிக்கும் செயலாக சுவர்க்கம் செல்வதை தடை செய்யும் பாவமாக திருக்குர்ஆன் இணைவைப்பைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. (பார்க்க: 39:66, 5:72)

சிலை வழிபாட்டை மிகப் பெரிய பாவமாக பைபிளும் எடுத்துக் காட்டுகிறது. மோசேவுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளாக பைபிள் கூறும் வசனங்களில் இஸ்ரவேலர்களில் சிலை வணக்கம் செய்யபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவுக்கு மிகப் பெரிய பாவச் செயலாக சிலை வணக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசேவுக்கு கர்த்தர் வழங்கியதாகக் கருதப்பட்ட கட்டளையில் பைபிள் இவ்வாறு கூறுகிறது.

"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்" (உபாகமம் - 17: 2-5)
(இன்னும் பார்க்க: உபாகமம் 13 ஆம் அத்தியாயம்)

சிலை வணக்கம் என்ற பாவத்தைச் செய்த காரணத்தால் மூவாயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர் என்றும் பைபிள் கூறுகிறது. (பார்க்க – யாத்திராகமம் 32:25-28)

இப்படியிருக்க இப்பாவச் செயலை செய்வதற்கு ஒரு தீர்க்கதரிசியானவரே துணை நின்றார் என்பது ஏற்புடையதா? இல்லை. மாறாக வரலாற்றைத் தொகுத்த பைபிள் ஆசிரியர்களுக்கு பெயரைக் குறிப்பிட்டதில் ஏற்பட்ட ஒரு பிழையாகவே இதனைக் கருத இயலும். இச்சம்பவம் குறித்து பைபிள் தரும் செய்திகளும் அவ்வாறு கருத இடமளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

ஒரு தண்டனைக்குரிய பாவச் செயலை ஆரோன் செய்தார் எனில் மூவாயிரம் பேருடன் அவரும் சேர்த்து தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். சிலை வணக்கம் செய்தவர்களை விட சிலையைச் செய்து மக்களுக்கு வழங்கியவரை முதலில் தண்டிக்கவேண்டும். (இதுதான் நீதி மிக்க செயல்!) மாறாக, இச்சம்பவம் நடந்த பிறகும் பைபிளில் மிக முக்கிய இடம் பிடிக்கும் பெரும் கண்ணியத்திற்கு உரியவராக ஆரோன் சித்தரிக்கப் படுகிறார். அச்சம்பவத்திற்குப் பிறகு கர்த்தரால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றும் நிரந்தரமான புரோகிதத்துவப் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்றும் பைபிள் கூறுகிறது. இதுவே இப்பாவச் செயலை ஆரோன் செய்யவில்லை, இது வரலாற்றை எழுதியபோது ஏற்பட்ட பிழை என்பதற்கான சான்றாக விளங்குகிறது.

இச்சம்பவம் குறித்த பைபிளின் வரிகளைக் காண்க:

''ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு, பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள். அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்" (யாத்திராகமம் - 32: 25-28)

சிலை வணக்கம் என்ற பெரும் பாசவச் செயலைச் செய்தவர்களைக் கொல்லும் படி மோசே கட்டளையிட்டார். அவ்வாறே மூவாயிரம் பேர் கொல்லப்பட்டதாக மேற்கண்ட வரிகளக் கூறுகின்றன. இதில் ஆரோன் கொல்லப்ட்டதாகத் தகவல் இல்லை. மாறாக இச்சம்பவத்திற்குப் பின்னரும் பலகாலம் ஆரோன் உயிருடன் இருந்ததாகவே பைபிள் கூறுகின்றது. உண்மையில் ஆரோன் தான் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை பாவத்தின் பால் தூண்டியிருப்பின் கர்த்தரின் கட்டளைப் பிரகாரம் அவரை முதலில் கொலை செய்ய மோசே ஏவியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன் சொந்த சகோதரனை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கொலை செய்து மோசே அநீதி இழைத்தார் என்று கூய இயலுமா? நிச்சயமாக இல்லை. மோசேயின் கட்டளைப் பிரகாரம் தண்டிக்கப்பட்டவர்களுடன் ஆரோன் இல்லை என்பதே அவர் இப்பாவச்செயலை செய்திருக்க முடியாது என்பதைத் தெளிவு படுத்துகிறது. மட்டுமல்ல, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு நிரந்தரமான குருகுலப் பதவிக்கு உரித்தாக்கப்பட்டவர். அவரே அப்படிப்பட்ட பெரும்பாவத்தைச் செய்யத் தூண்டினார் என்றால் அதற்குப் பின்னரும் அவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றிருக்கையில் சாதாரண மக்கள் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதில் என்ன தவறு? என்று நியாயம் கற்பிக்க நேரிடும். ஆரோனை மட்டும் இப்பாவத்தைச் செய்தபின்னரும் ஆசீர்வதித்த இறைவன் சாதாரண மக்களை இதற்காகக் குற்றம் பிடிப்பது ஏன்? என்ற கேள்வியும் தொடர்ந்து வரும்.

இன்னும் இப்பாவச் செயலைச் செய்த காரணத்தால் தன் சகோதரர்களையும் அயலார்களையும் சினேகிதர்களையும் கொன்று போடும் படி மோசே கட்டளையிட்ட போது ஆரோனை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள் என்று லேவியர்களும் மோசேவிடம் கேள்வி கேட்கவில்லை. அவரின் செயலை விமர்சிக்கவும் இல்லை. ஆரோன் தான் காளைக் கன்றின் சிலையை உருவாக்கியவர் என்றிருப்பின் இதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள் என்று மோசேயை லேவியர்கள் விமர்சித்திர்ப்பர்.

அது மட்டுமா? இப்பாவச் செயலைச் செய்தவர்களின் பெயரை என் புஸ்தகத்திலிருந்து அழித்து விடுவேன் என்று இதே சம்பவத்தைப் பற்றிய பைபிள் வரிகள் கூறுகின்றன.

''அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாகய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.'' (யாத்திராகமம் 32 :33)

இதன் அடிப்படையில் ஆரோன் இப்பாவச் செயலுக்குக் காரணமானவர் என்றிருப்பின் அவரது பெயரே முதலில் அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நடந்ததா? நிச்சயமாக இல்லை. மாறாக, கர்த்தரின் நிறைந்த அருளுக்கும் குரு குல பதவிக்கும் உரியவராகவும் இஸ்ரவேல் சமூகம் நெடுகிலும் போற்றப்படும் மாபெரும் புரோகிதராகவும் ஆரோன் விளங்கினார் என்பதே பைபிளின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும்.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் காளைக் கன்றின் சிலையைச் செய்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்து சிலை வணக்கத்தின் பால் அவர்களைத் தூண்டிய பாவச் செயலை ஆரோன் செய்திருக்க முடியாது என்பது விளங்குகிறது. பிறகு ஏன் அவர் சிலையைச் செய்ததாக பைபிள் கூறுகிறது? அது பைபிள் எழுத்தர்களுக்கு ஏற்பட்ட பிழை என்று எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் திருக்குர்ஆன் விவரிக்கும் ஹாருன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோ சிலை வணக்கத்தைத் தூண்டியவரல்ல, மாறாக அப்பாவச் செயலைத் தடுக்க முயன்று அதனால் இஸ்ரவேலர்கள் அளித்த தொல்லைகளையும் தாங்கிக் கொண்ட தியாக சீலர்! இச்சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் வசனங்களைக் காண்க:

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார். "மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்" என்று அவர்கள் கூறினர். (20: 90, 91)

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார்கள்:

''என் தாயின் மகனே! நிச்சயமாக இந்த சமூகத்தினர் என்னை பலவீனனாகக் கருதி, என்னைக் கொல்வதற்கு முற்பட்டனர்'' (7 அல் அஃராஃப் 150)
நறுக்கு:
பைபிளைத் தழுவி திருக்குர்ஆன் எழுதப்பட்டது என்றால் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை சிலை வழிபாட்டின் பக்கம் தூண்டியது ஆரோன் என்று திருக்குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். அப்படியல்ல! இது குறித்து எதுவுமே அறியாதிருந்த முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அகிலங்களின் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்திகள்! எனவேதான் பைபிளில் இடம் பெற்றதைப் போன்று மக்களைத் தீமையிலிருந்து தடுக்க வேண்டிய தீர்க்கதரிசிகளே அத்தகைய தீமையைச் செய்தனர் என்ற தவறான தகவல் அதில் இடம் பெறவில்லை!

(நபியே!)"இதற்கு முன் எந்த வேதத்தையும் நீர் ஓதிக்கொண்டிருந்தவரல்லர், உம்முடைய வலக் கரத்தால் அதனை நீர் எழுதியவருமல்லர், அப்படி இருந்திருப்பின் பொய்யர்கள் (உம்மைச்) சந்தேகித்திருப்பர்" (29 அல் அன்கபூத் 48)

0 comments: