Pages

Subscribe:

Friday, October 10, 2008

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன்.
ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்றுமாறு இயேசு கடவுளிடம் மன்றாடுவதாக பைபிள் கூறுகிறது. தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்ற பிரார்த்திக்குமாறு தன் சீடர்களிடமும் வேண்டிக் கொள்கிறார். இந்த பிரார்த்தனையை கடவுள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

பைபிளின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவான் 9:31)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் இயேசு தெய்வ பக்தியுள்ளவராக இருந்து, தெய்வத்தின் சித்தத்தைச் செய்தவராக இருந்தும் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

பைபிள் குறிப்பிடும் இன்னுமொரு சம்பவம்:

இறந்து கிடந்த லாசர் என்பவரின் சகோதரி மார்த்தாள் என்ற பெண் இயேசுவிடம் கூறினாள்,

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கு இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22)

கடவுளிடம் நீர் எதைக் கேட்டாலும் உனக்குத் தருவார் என்று இயேசுவைப் பற்றி நன்கறிந்த அப்பெண் கூறுகிறாள். இயேசுவும் அதனை மறுக்கவில்லை. அப்படியெனில் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு இயேசு மனமுருகி வேண்டிய போது அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருக்குமா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

மேற்கண்ட எபிரேயர் 5:7 வசனம் இயேசுவின் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை அவரிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியை அல்லவா கூறுகிறது? இல்லை என்று இதனை யாரேனும் மறுப்பார்களானால் “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்..” என்ற யோவான் 9:31 வசனத்தின் படி இயேசுவைப் பாவி என்று கூற வேண்டிய அபத்தமான நிலைக்கு தள்ளப்படுவர். அத்துடன் தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்டது என்று வாதிக்கப் படும் பைபிளின் வசனங்களையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இயேசுவின் பிரார்த்தனையை ஊன்றிக் கவனிக்கும் எவருக்கும் அவர் மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றவே அவ்வாறு காப்பாற்ற சக்தியுடைய கடவுளிடம் பிரார்த்தித்தார் என்பது புலப்படும். பயபக்தியுடன் கேட்ட அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு. திரித்துவக் கொள்கைப் படி பிதாவின் விருப்பமும் புத்திரனின் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை எனில் திரித்துவக் கொள்கையின் அடிப்படைக்கு இது முரணாக அமைகிறது.

கிறித்தவர்கள் இயேசு என்று குறிப்பிடும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் ஒரு மனிதராக இருந்தார். இஸ்ராயீல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நபியாக இருந்தார். அவரைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் போது இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாகக் கிறித்தவர்கள் நம்புகின்றனர். அது வெறும் யூகம் மட்டுமே என்று குர்ஆன் கூறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாக பைபிள் குறிப்பிட்டாலும் அநேக இடங்களில் அதற்கு முரணான தகவலையும் தருகிறது. இத்தகைய முரண்பாடுகள் குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்துவதுடன் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட இறைவேதத்தின் உறுதித் தன்மையைப் பறைசாற்றுகிறது.

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை’ கொன்று விட்டோம்’ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)

2 comments:

ஜோ/Joe said...

//அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான்.//

வாதம் செய்வதற்காக அல்ல .தெரிந்து கொள்வதற்காக ஒரு கேள்வி.

இஸ்லாம் படி இயேசு கொல்லப்படவில்லை .சரி .பின் எப்போது இறந்தார் ?

"அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான்." என்பதற்கு என்ன அர்த்தம்?

அபூ அப்திர்ரஹ்மான் said...

சகோதரர் ஜோ அவர்களே! உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இயயேசுவை இறைவன் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகின்றது. அவருக்கு இயற்கையான மரணம் இன்னும் ஏற்படவில்லை. யுக முடிவு நாளுக்கு முன்னர் அவர் மீண்டும் இந்த உலகத்துக்கு வருவார், நாற்பது வருடங்கள் இங்கு உயிர் வாழ்வார். பின்னர் இயற்கையான முறையில் மரணமடைவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: " என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), 'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பா அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' "மேலும், வேதத்தையுடையவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்னர் அவரை (ஈஸாவை) ஈமான் கொள்ளாதிருப்பதில்லை. எனினும், மறுமைநாளில், இவர்களுக்கு எதிராக (ஈஸாவான) அவர் சாட்சி கூறுவார்.
" (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ)

"அவர் நாற்பது வருடங்கள் உயிர் வாழ்வார், பின்னர் மரணமடைவார், முஸ்லிம்கள் அவருக்காகத் தொழுகை (மரணித்தவருக்கான சடங்கு) நடத்துவர்" (ஹதீஸ் சுருக்கம் - அபூதாவூத்)